×

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் ஏ,பி,சி, டிவிசன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல்

ஊட்டி : நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பாக 2023-24ம் ஆண்டில் நடைபெற்ற பல்வேறு அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணியினருக்கு பாராட்டு விழா நேற்று ஊட்டியில் உள்ள உள்ள அண்ணா உள்ளரங்கு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் மணி தலைமை வகித்தார்.நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா மற்றும் கேத்தி ஊர் தலைவர் சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டனர்.செயலாளர் மோகன் முரளி வரவேற்றார். நீலகிரி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அணிக்கு தேர்வு பெற்று விளையாடிய மிக இளையோருக்கான ஆடவர் பிரிவில் சங்கரநாத் மற்றும் மௌமேஷ், மிக இளையோருக்கான பெண்கள் பிரிவில் வர்ஷினி இளையோருக்கான ஆண்கள் பிரிவில் விஷ்ணு மற்றும் ரித்தீஷ் குட்டன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக விஷ்ணு செயல்பட்டிருந்தார்.

இளையோருக்கான பெண்கள் பிரிவில் மோனிஷா,மதுமிதா மற்றும் வித்யா ஆகியோர் தேர்வு பெற்று தமிழ்நாடு அணிக்காக விளையாடினர்.மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள் அனைவரையும் இந்த விழாவில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. நீலகிரி கால்பந்து சங்கத்தின் சார்பாக 13 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான லீக் போட்டியில் ஐடூவி., அகாடமி அணியினர்,15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஊட்டி பிரண்ட்ஸ் யுனைடெட் அணி, பெண்களுக்கான லீக் போட்டியில் எப்ரான் பள்ளி ஆகிய அணிகள் முதலிடத்தைப் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. பெண்களுக்கான நடத்தப்பட்ட லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை குட் ஷெப்பர்ட் பள்ளி அணி தட்டிச் சென்றது. மேலும், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஏ, பி, சி டிவிஷன்களுக்கான போட்டிகள் கடந்த எட்டு மாத காலமாக கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டது. சி பிரிவில் சென்னை சூப்பர் ஸ்ட்ரைக்கர் அணியினரும், பி பிரிவில் நீலகிரி பைசன் அணியினரும், ஏ பிரிவில் 11 ஸ்டார் அணியினரும் சாம்பியனாக தேர்வு பெற்றனர். இந்த அணியின் வீரர்கள் மற்றும் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், ஏ, பி, சி ஆகிய அணிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் பங்கு கொண்ட நீலகிரி பிரீமியர் லீக் கடந்த வாரத்தில் நிறைவு பெற்றது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியானது கோத்தகிரி காந்தி மைதானத்தில் நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தால் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நீலகிரி பைசன் அணியினர் வெற்றி பெற்று கோப்பையை தன் வசமாக்கியது.

மேலும் இந்த ஆண்டிற்கான சிறந்த கால்பந்து அணி என்ற விருதினை எங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி பிதிர்காடு அணிக்கு வழங்கப்பட்டது. இந்த அணியில் பங்குபெற்ற அனைத்து வீரர்களுக்கும் இந்த விழாவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வீரர்களையும் அணி நிர்வாகிகளையும் கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.முடிவில் நீலகிரி மாவட்ட சங்கத்தின் பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார்.

The post நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் ஏ,பி,சி, டிவிசன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Nilgiri District Football Association ,Ooty ,Anna Indoor Stadium ,Dinakaran ,
× RELATED கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு ஊட்டி...