×
Saravana Stores

செங்கல்பட்டு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள்: கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இதில், மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும், கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நீர்நிலைகளை தூர்வாரி சரி செய்ய வேண்டும். காட்டுப்பன்றி, மயில், மான்கள்பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். இதனால், ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும். பழுதடைந்த தார் சாலைகலை சீரமைக்க வேண்டும், அரசுப் பேருந்து வசதி, மின் கம்பங்கள் சீரமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது, விவசாயிகள் கோரிக்கைகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கூட்டத்தின் ஒருபகுதியாக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணூயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறை சார்பில் 3 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை மூட்டைகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரேணுகா மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post செங்கல்பட்டு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள்: கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Arunraj ,Chengalpattu ,District Collector ,Chengalpattu District Farmers Welfare Meeting ,Farmers' Welfare Day ,District ,Dinakaran ,
× RELATED மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...