புழல்: புழல்சிறை கழிவறையில் இருந்து 2 செல்போன், சிம்கார்டுகள், சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 கைதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் கஞ்சா மற்றும் செல்போன்கள் நடமாட்டம் இருப்பதாக சிறை துறையினருக்கு புகார்கள் வந்ததையடுத்து சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பூந்தமல்லியை சேர்ந்த அப்பு என்ற உதயா, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட புழல் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற பட்டன் சுரேஷ், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சூளைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற பாவாடை மணி ஆகியோர் கழிவறையில் 2 செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து புழல்காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தும் இவர்களுக்கு எப்படி செல்போன் கிடைத்தது. நீதிமன்றம் செல்லும்போது யாராவது இவர்களுக்கு கொடுத்தார்களா? சிறைதுறை அதிகாரிகள் பணம் பெற்றுகொண்டு செல்போன் கொடுத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். புழல் சிறையில் செல்போன் பறிமுதல் செய்வது தொடர்கதையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post புழல் சிறையில் 2 செல்போன் சிம்கார்டுகள், சார்ஜர் பறிமுதல்: 3 கைதிகளிடம் விசாரணை appeared first on Dinakaran.