நன்றி குங்குமம் டாக்டர்
ஆயுர்வேதத் தீர்வு!
உலக மக்கள் தொகையில் சுமார் ஐம்பது சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். பலவித பிரச்னைகளால் தலைவலி வருவதுபோல் தலைவலியும் பலவிதம். முன்பக்க தலைவலி, பின் பக்க தலைவலி, ஒற்றைத் தலைவலி, இதில் மனிதனுக்கு மிகவும் தொல்லை தருவது ஒற்றைத்தலைவலி எனப்படும் இந்த மைக்ரேன் தலைவலிதான். இது எதனால் வருகிறது. எப்படி வருகிறது. அதற்கு ஆயுர்வேதம் கூறும் மருத்துவம் என்ன. இதை முற்றிலும் குணமாக்க வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆயுர்வேதத்தில் மைக்ரேன் தலைவலியை சூர்யாவர்த்தம் என்றும் சில நேரங்களில் அர்தாவபேதகம் என்றும் கூறுவோம். சூர்யா என்றால் சூரியன் என்றும் ஆவர்தா என்றால் துன்பம் என்றும் பொருள். அர்த என்றால் பாதி என்றும் பேதகம் என்றால் உடைக்கும் என்றும் பொருள். ஆக சூரிய உதயத்தின்போது தலைவலி ஆரம்பித்து, நண்பகல் நேரத்தில் உச்சத்தை அடைந்து மண்டையை பிளக்கிறது. மீண்டும் மாலையில் சற்றே குறைகிறது என்பதே இதன் பொருள். ஆனால், இந்நோயின் பொதுவான அம்சம் இதுவாக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் இந்நோய் இப்படி வருவதில்லை. நோயாளியின் உடல், வயது, வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்க வழக்கங்களின் அடிப்படையில் அறிகுறிகள் மாறுகிறது. மைக்ரேன் தலைவலி பத்தில் ஒருவரை பாதித்துக் கொண்டேதான் இருக்கிறது.
மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றைச் தலைவலி மூளை மற்றும் ரத்தநாளங்களின் அதிகப்படியான அழுத்தத்தால் ஏற்படக்கூடிய ஒரு நோய். ஆயுர்வேதத்தில் இயற்கைத் தூண்டுதல்களை அடக்குவது செரிமானமின்மை, கெட்டுப்போன உணவை உட்கொள்வது, நீண்ட நேரத்திற்கு சூரிய ஒளியில் இருப்பது, எண்ணெய் உணவுகள் மற்றும் காரமான உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது, கோபம், பொறாமை, மனஅழுத்தம் போன்ற மனோநிலைகள் மற்றும் உலர்ந்த காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஆகியவை இந்த சூரியாவர்த்த தலைவலிக்கு காரணமாக அமைவதாக பார்க்கின்றோம்.
இந்த வகை தலைவலிக்கு பல்வேறு தூண்டுதல்கள் உண்டு.
உணர்ச்சித் தூண்டுதல்கள்: மனஅழுத்தம், கவலை, பதற்றம், அதிர்ச்சி, மனச்சோர்வு, உற்சாகம்.
உடல் தூண்டுதல்கள்: சோர்வு, தூக்கமின்மை, ஷிஃப்ட் வேலை, கழுத்து அல்லது தோள்பட்டை அழற்சி, பயணக் களைப்பு, குறைந்த ரத்த சர்க்கரை.
உணவுமுறை தூண்டுதல்: தவறவிட்ட தாமதமான அல்லது ஒழுங்கற்ற உணவு முறை, நீரிழப்பு, மது, டீ மற்றும் காபி போன்ற காஃபின் தயாரிப்புகள், சாக்லேட் மற்றும் சிட்ரஸ் பழங்கள்.
சூற்றுச்சூழல் தூண்டுதல்கள்: ஒளிமிகுந்த பிரகாசமான விளக்குகள், தொலைக்காட்சி அல்லது கணினித்திரை, புகைப்பிடித்தல் அல்லது புகைப்பிடிக்கும் அறையில் இருத்தல், உரத்த சத்தங்கள், கடுமையான வாசனை.
மருத்துவத் தூண்டுதல்கள்: சில வகையான தூக்க மாத்திரைகள், கருத்தடை மாத்திரை, மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளைப் போக்க ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை, சாதாரண தலைவலியைப் போல் இல்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் வருகிறது. இந்த வலி வந்தால் சிலருக்கு இரண்டு மூன்று மணி நேரம் இருக்கலாம். சிலருக்குக் காலை முதல் மாலை வரை இருக்கலாம். ஆனால் இந்த வலி இருக்கும் ஒவ்வொருவரும் நரகத்தில் இருப்பது போல் உணர்கின்றனர்.
பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி
ஆண்களைவிட பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. பருவமடைதல், மாதவிடாய் காலங்கள், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிறுத்தம், அத்துடன் கருத்தடை மருந்துகள் பயன்பாடு, ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையின் பயன்பாடு ஆகியவை ஒற்றைத் தலைவலி ஏற்படுத்தக்கூடும். ஒற்றைத் தலைவலி பெண்களுக்கு பொதுவாக பருவமடைதலுக்கு பிறகே தொடங்குகிறது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அல்லது மாதவிடாய் காலத்தில் மிகவும் சகஜமாக வருகிறது. மேலும் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிற்கப்போகும் காலத்தில் அதிகரிக்கிறது. இந்த மாறுபாடுகள் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.
பருவமடைதல் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஆகியவை பெண்களின் ஒற்றைத் தலைவலியுடன் மிகவும் தொடர்புடைய காலங்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 70 சதவீதம் பெண்கள் தங்கள் தலைவலி மாதவிடாயுடன் தொடர்புடையதாக கூறுகின்றனர். மாதவிடாய் மைக்ரேன்கள் மாதவிடாய் அல்லாத ஒற்றைத் தலைவலியை விட நீண்ட காலம் நீடிக்கும். அதிக வலியுடன் இருக்கும். மேலும் சிகிச்சைக்கு உடனடியாக கட்டுப்படாது.
அறிகுறிகள்
காரணம் தெரியாமல் பலவிதமான அறிகுறிகள் உண்டாகும். ஒற்றை பக்கமாக வரும் துடிக்கும்தலைவலி குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரும். நீண்ட நேர வலி இருக்கும். வலியானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். பார்வை தெளிவு இருக்காது. இது ஒற்றைத் தலைவலி என்பதால் ஒரு பக்கம்தான் வரும் என்று இல்லை இரண்டு பக்கமும் கூட வரலாம். பரம்பரையாக வரவும் வாய்ப்பு உண்டு. இந்த வகையான தலைவலிக்கு தூக்கமின்மையும், நேரத்திற்கு உணவு எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு காரணமாகும். தீவிர மைக்ரேன் வலி இருக்கும்போது சோர்வடைவதையும், பார்வை மங்குவதையும், குமட்டல் உண்டாவதையும் ஒரு பக்கம் கை கால்களில் பலம் குறைவதை உணரலாம். சில நேரங்களில் வாந்தி எடுத்த பின்னரே தலைவலி குறையும்.
அறிகுறிகள் இரண்டு, மூன்று நாட்களுக்கு கூட நீடிக்கும். தலைவலி இருக்கும் சமயத்தில் கண்களில் அதிக ஒளி பார்த்தாலோ, காதினுள் அதிக ஒலி கேட்டாலோ கூட எரிச்சலை ஏற்படுத்தும். இருட்டு அறையில் அமைதியாக இருக்கும் இடத்தில் படுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கும். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் தறுவாயில் இத்தலைவலி மெல்ல குறைந்து தலைவலியால் பாதிக்கப்பட்டவர் இயல்பாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு.
ஆயுர்வேத சிகிச்சை
ஆயுர்வேத சிகிச்சையானது நோய்க்கானது அல்ல. ஆனால் அது தனிநபரின் நோயின் குறிப்பிட்ட நிலைக்கு ஏற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிக்க பஞ்சகர்மா சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இது செய்யப்பட வேண்டும். மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்க மருத்துவர் முற்படுவார்.
பஞ்சகர்மா
நாள்பட்ட ஒற்றைத் தலைவலியில், பஞ்சகர்மா, நச்சுகளை அகற்றவும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. நஸ்யம், சிரோதரை, சிரோ ஆப்யங்கம், சிரோவஸ்தி போன்ற சிறப்பு சிகிச்சைகள் நரம்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகின்றன.
நஸ்யம்
நஸ்யம் (மூலிகை தயாரிப்புகளை மூக்கின் வழியாக வழங்குதல்) – நரம்புகளில் நேரடியாகச் செயல்படும் சிகிச்சைகளில் ஒன்றாகும். நாசிக்குள் பல நரம்பு முனைகள் அமைத்து நமக்கு வாசனை உணர்வை ஏற்படுத்துகின்றது. நஸ்யம் மூலம் பயன்படுத்தப்படும் மருந்து எண்ணெய்கள் நேரடியாக இந்த நரம்பு முனைகளில் செயல்படுகின்றன. வாத்ப பித்தங்களை அமைதிப்படுத்த உதவுகின்றன. மேலும் சைனஸில் படிந்திருக்கும் சளியை வெளியேற்றுகின்றன. இதனால், இப்பகுதியில் இருக்கும் அழுத்தம் தணிகிறது.
வஸ்தி (எனிமா) மற்றும் விரேச்சனம் (பேதி சிகிச்சை) போன்ற மற்ற பஞ்சகர்மா சிகிச்சைகளும் ஒற்றைத் தலைவலியில் உதவுகின்றன.ஆயுர்வேதத்தில் கசாய மருந்துகளான கல்யாணகம், பத்தியாக்ச தாத்திரியாதி ஆகியவற்றுடன் திரிகடுகு சூரணம், சிரஷுலாதி வஜ்ரரசம், பேதிக்கு கல்யாணக குடம், நசிய சிகிச்சைக்கு அணு தைலம், அதிமதுர தைலம், ஷீர பலா தைலம், பற்றிடுவதற்கு எலுமிச்சை சாற்றுடன் ராஸ்னாதி சூரணம், தலையில் மசாஜ் செய்வதற்கு அசன வில்வாதி தைலம், பலா குடிச்சியாதி தைலம் போன்ற மருந்துகளை பயன்படுத்த நல்ல பலன் தரும். இரவில் கல்யாணக நெய் 10 மில்லி பாலுடன் உணவுக்கு பின் கொடுக்கலாம்.
ஆயுர்வேதத்தில் இத்தலைவலியை தவிர்க்க பல வழிமுறைகள் உள்ளன.
தவிர்க்க வேண்டியவை
*நோயைத் தூண்டும் உணவுப் பொருட்கள்
*புகைபிடித்தல் மற்றும் மது
*உலர்ந்த உணவுகள், துரித உணவுகள்
*நீண்ட நேர வெயில்
*பதற்றம், கோபம்
*மலச்சிக்கல்
பின்பற்ற வேண்டியவை
*தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி
*8 மணி நேரத் தூக்கம்
*பசிக்கும்போது உணவு உண்ணுதல்
*ஒழுங்காக தண்ணீர் குடிப்பது.
*மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி பற்றி நீங்கள் முழுவதுமாக அறிந்து கொண்டால் வாழ்க்கைமுறை மாற்றங்களை பின்பற்றி அதிலிருந்து விடுபடலாம்.
தொகுப்பு: உஷா நாராயணன்
The post மைக்ரேன் தலைவலி போயே போச்சு! appeared first on Dinakaran.