×

விளைநிலங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சல்

ஊட்டி : தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில், ஜூன் மாதத்தில் கூட நீலகிரியில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலை உருவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதி மற்றும் மாநில எல்லைகளில் அவ்வப்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

ஆனால், ஊட்டி, குந்தா, குன்னூர் போன்ற பகுதிகளில் மழை குறைந்தே காணப்படுகிறது. எப்போதும், ஜூன் 1ம் தேதிக்கு முன்னதாகவே துவங்கும் பருவமழை இம்முறை வருவது போல், அவ்வப்போது சாரல் மழை தூவிவிட்டு செல்கிறது. இதனால், விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. அனைத்து அணைகள், நீரோடைகள் மற்றும் குளங்கள் வறண்டே காணப்படுகிறது. கடந்த ஆண்டைபோல் இம்முறையும் பருவமழை பொய்த்துவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

தற்போது மழை பெய்யாத நிலையில், தண்ணீருக்காக விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீரிலும் அனைத்து பகுதிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தொடர்ந்து ஓரிரு நாட்களுக்குள் கன மழை பெய்யவில்லை எனில், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், லாரி தண்ணீர் வாங்கி ஊற்றி பயிர்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

The post விளைநிலங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : South West ,Nilgiris ,Pandalur ,Kudalur ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு பருவமழையால்...