×

ஏரி காத்த ராமா… எம்மை காக்க வா… வா..!

மதுராந்தகம் கோதண்டராமர் ஆனி பிரமோற்சவம் துவக்கம் 22.6.2024

சென்னை-திண்டிவனம் சாலையில் சென்னைக்குச் செல்லும் பொழுது என்னை அறியாமலேயே மதுராந்தகம் பாலத்தில் கண்கள் வலது பக்கம் பார்த்துக் கொண்டே வரும். சந்தன வண்ணம் பூசப்பட்ட ராஜகோபுரம் தென்படும். மனப்பூர்வமாக அந்த ராஜகோபுரத்தை வணங்கினால்தான் மனம் ஆறுதல் பெறும். வணங்கிவிட்டு இடப்புறம் பார்த்தால், மிகப் பெரிய ஏரி கண்ணுக்குத் தெரியும். அற்புதமான மதுராந்தகம் ஏரி. அந்த காலத்தில் விவசாயத்துக்காக வெட்டப்பட்ட ஏரி. மதுராந்தகம் ஏரி காத்த ராமனை இறங்கி தரிசிக்க வேண்டும் என்று ஒரு நாள் பயணத்தை இடையில் துண்டித்துக்கொண்டு இறங்கினேன். பேருந்து நிறுத்தம் இருக்கிறது. படிகளில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தாலே கோயில் வந்துவிடுகிறது.

கம்பீரமான ராஜகோபுரம். மிக உயரம் இல்லை. ஆனாலும் அழகாக இருக்கிறது. அதன் எதிரில் ரம்யமான திருக்குளமும் காட்சியளிக்கிறது. இந்தத் கோயிலில் ராமநவமி உற்சவம் மிகவும் விசேஷம். ஒரே நாளில் ஸ்வாமிக்கு ஐந்து விதமான அலங்காரங்களுடன் சிறப்பாகக் கொண்டாடப் படும். ஸ்ரீராமநவமி அன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்சகச்ச அலங்காரம் செய்து கொள்வார். பிறகு ஒரு வஸ்திரம் மட்டும் அணிந்து கொண்டு ஏகாந்த அலங்காரம்.

மதியம் திருவாபரண அலங்காரம் என்று பல்வேறு விதமான ஆபரணங்களோடு காட்சி தருவார். மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்துக் கொண்டு காட்சி தருவார். இரவில் முத்துக் கொண்டை திருவாபரணத்தோடு காட்சி தருவார். இப்படி ஒரே நாளில் ஐந்து அலங்காரங்களோடு பெருமாள் காட்சி தருவது இங்கு தனிச் சிறப்பு. தேர்த் திருவிழா மிகப் பிரசித்தியாக இருக்கும். அதே போலவே, ஆனி மாத பிரம்மோற்சவம் மிக விசேஷமாக நடைபெறும்.

ஏரி காத்த ராமர் என்று எப்படி பிரசித்தி பெற்றார்?

மதுராந்தகத்திற்கு வகுளாரண்யம், என்று ஒரு பெயர் உண்டு. மதுராந்தக சதுர்வேத மங்கலம் என்று ஒரு பெயர். அது சரி, ஏரி காத்த ராமர் என்று எப்படி பிரசித்தி பெற்றார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா! அதற்கு ஒரு அற்புதமான நடந்த கதை உண்டு. அதற்கான கல்வெட்டு சாட்சியங்களும் கோயிலிலே உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். 1795 – 98 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்தவர் கர்னல் பிளேஸ் துரை.

அப்பொழுது பெருமழை பெய்யும் காலங்களை சமாளிப்பது மிகப்பெரும் பாடாக இருக்கும். ஏரியிலிருந்து வழிந்து ஊரை ஒரு பதம் பார்த்துவிட்டுதான் வெள்ளம் ஓயும். இப்படி இருக்கும் போது, ஒரு ஆண்டு சற்றும் எதிர்பாராத கூடுதல் மழை பெய்தது. மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் வெள்ளம் எனப் பாய்ந்தது. எந்த நேரத்திலும் ஏரி உடையலாம் என்பது போன்ற அச்சம்.

மக்களெல்லாம் வீட்டைக் காலி செய்துவிட்டு, உயரமான இடங்களில் போய் அமர்ந்துகொண்டார்கள். கரையை நூற்றுக்கணக்கான ஆட்கள் இரவும் பகலுமாக வேலை செய்து மண்மூட்டைகளை அடுக்கி சரி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவையெல்லாம் வருகின்ற வெள்ளச் சீற்றத்தின் முன்னால் நிற்குமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில், கோயிலில் தாயார் சந்நதி கட்டுவதற்காக கற்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள். அந்த கற்களும் கரை உடைப்புக்காக எடுத்துச் செல்லப்பட, மக்கள் கவலைப்பட்டார்கள்.

எவ்வளவோ கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தாயார் சந்நதிக்காக சேர்த்தது. இப்படிப் போகிறதே என்று அவர்களுக்கு வருத்தம். அதே நேரத்தில், இந்தப் பிரச்னை கலெக்டர் பிளேஸ் துரை அவர்களிடம் சென்ற போது அவர் நேரடியாக வந்து ஏரிக்கரையைப் பார்த்துவிட்டு மக்களையும் பார்த்தார். அப்பொழுது அவர் சொன்னார்.

‘‘இப்பொழுது தொடர்ந்து மழை பெய்து எந்த நேரம் ஏரி உடையுமோ என்ற அபாயம் இருக்கிறது. உங்கள் ராமன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று நீங்கள் வழிபடுகிறீர்கள். அவருடைய சக்தியை இன்றைக்குப் பார்த்துவிடலாம். அவர் மிகவும் சக்தி படைத்தவராக இருந்தால், இந்த அபாயத்திலிருந்து உங்கள் ராமன் காப்பாற்றட்டும். அதன் பிறகு அரசாங்க செலவில் நானே தாயார் சந்நதியைக் கட்டிக் கொடுக்கிறேன். மற்ற பகுதிகளையும் சீரமைத்துக் கொடுக்கிறேன்’’ என்று வாக்கு கொடுத்துவிட்டு கரை பாதுகாப்புப் பணியை பார்ப்பதற்காகச் சென்றுவிட்டார். இரவு வந்துவிட்டது.

ஆட்கள் எல்லாம் வேலை பார்த்து ஓய்ந்துவிட்டார்கள். மழையோ, விட்ட பாடில்லை. கலெக்டர் பிளேஸ் துரை, இனி இறைவன் விட்ட வழி என்று நினைத்துக் கொண்டு ஏரியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று ஒரு இடத்தில் தண்ணீர் உடைந்து வெளியேறுவது போல ஓசை கேட்க, கலெக்டர் உதவியாளருடன் ஓடினார். அவருடைய மனம் அடித்துக் கொண்டது. ஆட்களும் இப்பொழுது இல்லை.

இந்த ஓட்டையை எப்படி அடைப்பது? ஊருக்குள் இருந்து ஆட்கள் வருவதற்குள் மொத்தமாக அணை உடைந்துவிட்டால் பெரும் ஆபத்தாகிவிடுமே, என்று தவித்தார்.அப்பொழுது அவருடைய கண்களையே நம்ப முடியவில்லை. இரண்டு இளைஞர்கள் அந்த இரவிலும் மணல் மூட்டைகளை வைத்து அடைத்துக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் வெளிவரும் ஓசை நின்றது. ஆனால், இருட்டில் அவர்கள் முகம் தெரியவில்லை. அவர் யாரது? என்று கேட்டுக் கொண்டே ஓடியபொழுது அந்த இளைஞர்கள் கையில் வில்லுடன் பொறுமையாக நடந்து செல்வது போன்ற காட்சியைப் பார்த்தார். இருட்டோடு இருட்டாக அவர்கள் நடந்து கோயிலுக்குள் சென்று மறைவதைப் பார்த்த கலெக்டருக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை.

‘‘ராமன் சக்தி படைத்தவரா?’’ என்று கேட்டோமே, அவன் சக்தி படைத்தவன்தான் என்பதை நிரூபித்துவிட்டான் என்று மனம் தெளிந்தார். மழை நின்றது. ஏரிக்கு வந்த ஆபத்து நீங்கியது. கலெக்டர் இனி மழை ஆபத்து இல்லை என்று நிம்மதி அடைந்தார்.அடுத்த நாள் காலை அவர் மக்களை அழைத்தார். ‘‘நான் நம்புகின்றேன் இந்த ஏரியை நேற்று இரவு காப்பாற்றிக் கொடுத்தவன் உங்கள் ராமன்தான் என்று நான் நம்புகின்றேன். நான் சொன்னது போலவே இந்தக் கோயிலை புனரமைத்து, தாயார் சந்நதியும் கட்டித் தருகின்றேன்.’’ தாங்கள் நம்பிய ராமன் தங்களைக் காப்பாற்றியதோடு, நம்பாத வெள்ளைக்கார துரையின் மூலம் தன் கோயிலையும் கட்டிக் கொண்டான் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அன்று முதல் இந்த ராமருக்கு “ஏரி காத்த ராமன்’’ என்ற பெயர் வந்தது.

ஸ்ரீராமானுஜர் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்ட இடம் வைணவ ஆச்சாரியார் சுவாமி ராமானுஜர், ஒரு முறை பெரிய நம்பிகளைக் காண ஸ்ரீரங்கம் புறப்பட்டார். அப்பொழுது திருவரங்கத்தில் வைணவத் தலைமை இல்லாததால், மற்ற ஆச்சாரியர்களின் ஆலோசனைப்படி, காஞ்சிபுரம் சென்று எப்படியாவது ராமானுஜரை வரவழைக்க வேண்டும் என்று பெரிய நம்பிகள் காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இருவரும் மதுராந்தகம் ஏரிக்கரையில் சந்தித்தனர்.

அப்பொழுது ராமானுஜர், பெரிய நம்பிகளிடம் தனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் (ஐந்து தீட்சைகளை) அளிக்கும்படி வேண்டிக் கொண்டார். அப்பொழுது பெரியநம்பிகள் ‘‘பக்கத்திலேயே காஞ்சிபுரம் இருக்கிறது. அங்கே வரம் தரும் பேரருளாளன் இருக்கிறார். அங்கே சென்று பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொள்ளலாம். அல்லது உம்மை அழைத்துவரச் சொல்லி திருவரங்கத்துப் பெரியவர்கள் என்னை அனுப்பினார்கள். நாம் இருவரும் ஸ்ரீரங்கம் செல்வோம். அங்கே பெரிய பெருமாள் திருமுன் இந்த உயர்ந்த பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ளலாம்” என்று சொன்னார். ராமானுஜர் மறுத்தார்.

‘‘வாழ்க்கை என்பது நிச்சயம் இல்லாதது. ஸ்ரீரங்கம் போகும் வரை நிலைக்கும் என்றோ, காஞ்சிபுரம் போகும் வரை நிலைக்குமென்றோ யாராலும் உறுதி சொல்ல முடியாது. ஒரு நல்ல விஷயத்தை உடனே முடித்துவிட வேண்டும். தள்ளிப் போட்டால் அந்த விஷயம் முடியாமலே போய்விடும். இந்தத் திருத்தலத்துக்கு என்ன குறை? இதோ ஏரி காத்த ராமன் இருக்கிறார். அவர் முன்னாலேயே தாங்கள் அடியேனுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்ய வேண்டும்’’ என்று சொல்ல, மதுராந்தகம் ஏரியில் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, ராமர் கோயிலுக்கு வந்து, பிரகாரத்தில் உள்ள மகிழ
மரத்தடியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்தார்.

இன்றும் ராமர் கோயிலின் பின்புறம் அந்த சிறிய மண்டபத்தோடு மகிழமரம் இருக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்ச்சியை அற்புதமான மகிழமரம் இன்றும் நினைவூட்டும். அந்த இடத்தில் சற்று அமர்ந்தாலே நமக்கு ஞானம் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

ஆண்டுதோறும் ஆவணிமாத வளர்பிறை பஞ்சமி தினத்தன்று ராமானுஜர் பெரிய நம்பிகளிடம் மந்திர உபதேசம் பெற்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட விழா மதுராந்தகத்தில் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் உற்சவமூர்த்திகளாக பெரிய நம்பிகளும் ஸ்ரீராமானுஜரும், அந்த காலத்தில் அனுஷ்டானம் செய்த ஏரியின் படித்துறைக்கு எழுந்தருள்வார்கள். அங்கே சிறப்பு திருமஞ்சனம் நடக்கும். அதன் பிறகு சுவாமி ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்கார வைபவம் நடைபெறும். பொதுவாக, மற்ற திருத்தலங்களில் காவி உடையுடன் காட்சி தரும் ராமானுஜர், இங்கு வெள்ளை வஸ்திரத்தோடு காட்சி தருவார். அவர் சந்நியாசம் கொள்வதற்கு முன் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற இடம். எனவே கிரகஸ்தராக (இல்லறவாசியாக) ராமானுஜர் காட்சி தருவதாகச் சொல்வார்கள். ராமானுஜர் சந்நதியில் அவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்த சங்கு, சக்கரம் நாம் தரிசிக்க முடியும்.

விபாண்டவ முனிவருக்கு காட்சி தந்த ராமன்

மதுராந்தகம், உத்தமசோழன் என்னும் மதுராந்தகச் சோழனால் வேத விற்பன்னர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட இடம் என்றும் ஒரு குறிப்புண்டு. இந்த இடத்தில் சுகர், விபண்டகர் போன்ற முனிவர்கள் தவம் செய்த பெருமையும் உண்டு. ராவண வதம் முடிந்த பின்னால் அயோத்திக்குத் திரும்பும் வழியில் முனிவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சீதா பிராட்டியுடன் இந்த இடத்தில் ராமர் சற்று நேரம் இளைப்பாறியதாக தலபுராணம் கூறுகிறது. விபண்டக மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சீதாதேவி சமேதராக ராமபிரான் திருக்கல்யாண கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

ஓங்காரம் போல் திருக்காட்சி

கம்பீரமான மூலவருக்கு ஏரி காத்த பெருமாள் என்று பெயர். மூலவர் எட்டடி உயரத்தில் சுதை வடிவத்தில் காட்சி தருகின்றார். அவருக்கு முன்னால் இருக்கக் கூடிய உற்சவருக்கு கருணாகரப் பெருமாள், பெரிய பெருமாள் என்று திருநாமம். பார்க்கப் பார்க்க பரவசமான காட்சி. நெடியோன் என்பது போல நீண்ட இடது திருக்கரத்தில் வில்லையும், வலதுகரத்தில் அம்பையும் வைத்துக் கொண்டு காட்சி தருகின்றார். இடது பக்கம் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் வழுவிலா அடிமை செய்யும் இளையபெருமாள் காட்சி தர, சுவாமிக்கு வலப்பக்கத்தில் சீதாதேவி அருட்காட்சி தருகின்றார்.

வால்மீகி பகவான் சீதை ராமர் லட்சுமணன் இவர்கள் இணைந்த இந்த கோலத்தை பிரணவத்திற்கு ஒப்பிடுவார் பிரணவத்தில் ‘‘அ’’ காரம் ஸ்ரீராமன். ‘‘உ’’ காரம் தாயார் சீதாதேவி. ‘‘ம’’ காரம் இளையபெருமாள். இந்த மூவரும் நடந்து சென்றது பிரணவமே கால் எடுத்து நடந்து சென்றது போல காட்சி தந்தது என்று பேசுவார் வால்மீகி. அந்த காட்சியை இங்கே நாம் பார்க்கலாம். சகல வேதசாரமான பிரணவம் இங்கே ராமனாகவும், லட்சுமணனாகவும், சீதையாகவும் மூன்று அட்சரங்களாக காட்சி தருகிறது.

சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமர் நிற்கிறார் விபண்டக முனிவருக்கு காட்சி தந்த பொழுது சீதையின் மீது உள்ள அன்பினால் சீதையின் கைகளைப் பற்றிக்கொண்டு காட்சி தந்ததாக ஒரு செய்தி உண்டு. இந்த ராம – லட்சுமணர்களை தரிசித்தாலே போதும் தம்பதிகள் இடையே எத்தனை மனஸ்தாபம் இருந்தாலும் நீங்கிவிடும் என்கின்ற நம்பிக்கை உண்டு. சந்நதியின் வலப்புறம் சிறிய மண்டபத்தோடு தாயாருக்கு தனி சந்நதி உண்டு. ஜனகவல்லி தாயார் என்று திருநாமம். ஜனக மகாராஜனின் மகள் என்கின்ற குறிப்பு இந்த திருநாமத்தில் நமக்கு விளங்கும்.

கம்பன் தரிசித்த பிரகலாத வரதன்

கம்பராமாயணம் இயற்றிய கம்பர், பல்வேறு ராமர் தலங்களுக்கு யாத்திரை சென்ற போது, இந்தத் தலத்துக்கும் வந்தார். அவர் வந்த பொழுது ஓர் இடத்தில் இருந்து சிம்ம கர்ஜனை கேட்டது. எந்த இடத்தில் இருந்து இந்த சத்தம் வருகிறது என்று பார்த்த பொழுது அங்கே லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். சிங்கமுகம் இல்லாமல் மனித மிருக முகத்தோடு காட்சி தரும் இந்த நரசிம்மரை பிரகலாத வரதன் என்று அழைக்கிறார்கள். இவருக்கு சுவாதி நட்சத்திர நாளில் விசேஷத் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

ஸ்ரீராமர் தன்னுடைய காரியம் வெற்றி பெற வேண்டும் என்று இங்கு உள்ள கருணாகர பெருமாளை வேண்டிக் கொண்டு சென்றார் என்று ஒரு வரலாறு உண்டு. 16 கரங்களுடன் நெருப்புக் கிரீடம் அணிந்த சக்கரத்தாழ்வார் திருக்கோயிலின் காட்சி தருகின்றார். இவருக்கு கீழே எந்திர பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளதால், மிகப் பெரிய வரப்பிரசாதியாக விளங்குகின்றார். இந்த சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகின்றார்.

மண்டபத்தில் தியாகராஜ கீர்த்தனைகள்

ராமர் கோயிலின் வெளி மண்டபத்தில் கல்வெட்டுகளாக தியாகராஜ கீர்த்தனைகளைக் காணலாம். இதை செய்தவர் பற்றிய கதை சுவையானது. தபால் துறையில் சுந்தரம் ஐயர் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை காசி சென்றிருந்த பொழுது துளசிதாசர் கோயிலுக்குச் சென்றார். அங்கே பிரகாரத்தில் சலவைக் கற்களால் ராமாயணம் முழுவதும் பொறிக்கப்பட்டதைக் கண்ட அவர், திருவையாறு தியாகராஜர் சமாதியில் இதைப் போன்ற ஒரு மண்டபத்தில் தியாகராஜரின் கீர்த்தனைகளை சலவைக் கல்லில் பொறித்து வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. சாதாரண குடும்பஸ்தரான அவருக்கு எப்படி பணம் சேகரிப்பது என்கிற கவலை வந்துவிட்டது.

தான் செய்யப் போகும் காரியத்தைச் சொல்லி, யாரைப் பார்த்தாலும் ஒரு ரூபாய் கைங்கரியம் வாங்குவார். சில பணக்காரர்கள், என்ன இவ்வளவு குறைவாகக் கேட்கிறார் என்று 500, 1000 என்று தர, தியாகராஜர் கோயிலில் கீர்த்தனைகள் கல்வெட்டுப் பணி நிறைவு பெற்று, பணமும் மீந்துபோனது. அப்பொழுது டி.எஸ்.பால கிருஷ்ண சாஸ்திரிகள் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது, ராமர் பட்டாபிஷேகத்தில் சில தியாகராஜர் பாடல்களைப் பாடுவார். அவற்றையெல்லாம் மதுராந்தகம் ராமர் கோயிலில் பதித்து வைக்கலாம் என்று முடிவு எடுத்து பதிக்கப்பட்டதுதான் இந்த கல்வெட்டுகள் என்கிறார்கள். இத்தனை அற்புதத்தையும் காண வாருங்கள்
மதுராந்தகத்திற்கு.

முனைவர் ஸ்ரீராம்

The post ஏரி காத்த ராமா… எம்மை காக்க வா… வா..! appeared first on Dinakaran.

Tags : Rama ,Mathuranthakam ,Kothandaram ,Ani ,Promotsavam ,Chennai ,Chennai-Tindivanam road ,Maduranthakam bridge ,Rajagopuram ,
× RELATED வசிஷ்டர் வணங்கிய வாயுமைந்தன்