×

தொடர் பராமரிப்பு பணிகளால் 300 கண்மாய்களை நிரப்பி சென்ற மணிமுத்தாறு

சிவகங்கை : பராமரிப்பு பணிகளால் 25 ஆண்டுகளுக்கு பிறகு 300 கண்மாய்களை நிரப்பிச் சென்று மணிமுத்தாறு கடலில் கலக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் வைகையாறு, மணிமுத்தாறு, பாலாறு, சருகணியாறு, நட்டாறு கால்வாய், உப்பாறு, பாம்பாறு, தேனாறு, விருசுழியாறு என ஒன்பது ஆறுகள் உள்ளன. ஒன்பது ஆறுகள் இருந்தாலும் இவைகளில் சிலவற்றில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகப்படியான மழை பெய்யும் காலங்களில் மட்டுமே நீர் செல்லும். சிவகங்கை அருகே ஏரியூர் கண்மாய் கழுங்கில் இருந்து மணிமுத்தாறு தொடங்குகிறது. அழகர்கோவில் பகுதியில் வரும்போது உப்பாறாகவும், கொட்டாம்பட்டி பகுதியில் வரும்போது திருமணிமுத்தாறாகவும் ஏரியூர் கண்மாய்க்கு வருகிறது. ஏரியூர் கண்மாய் நிறைந்து அதன் கழுங்கில் இருந்து மணிமுத்தாறாக சுமார் சுமார் 63 கி.மீ பயணித்து ராமநாதபுரம் மாவட்டம் இதன்கூர் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 25ஆண்டுகளாக இந்த ஆற்றில் நீர் வரத்து இல்லை. இந்நிலையில் மணிமுத்தாறு உள்ளிட்ட சில ஆறுகளில் சீமைக்கருவேல மரம், புதர்கள் அகற்றம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்தன. இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த மழையால் நவ.2ல் ஆற்றில் நீர் வரத்து தொடங்கியது. இந்த நீர் சிங்கம்புணரி, திருப்பத்தூர், தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் உள்ள 300 கண்மாய்களை நிரப்பிய நிலையில் அதன்பிறகு கடலில் கலந்து வருகிறது. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் ஆற்றில் வந்த நீரால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது:பல ஆண்டுகளுக்குப்பின் ஆற்றில் நீர் வந்ததால் கண்மாய்கள் நிரம்பியது. இந்த ஆற்றுப்பகுதியில் 12 தடுப்பணைகள் உள்ளன. ஆனால் இவையனைத்தும் பழுதடைந்த நிலையில் பராமரிப்பில்லாமல் இருப்பதால் தற்போது நீர் கடலில் கலக்கிறது. தடுப்பணைகள் சரியாக இருந்தால் கடலில் கலக்காமல் மேலும் பயன் கிடைத்திருக்கும். எனவே தடுப்பணைகளை புதிதாக அமைக்கவும், தொடர்ந்து ஆற்றுப்பகுதியில் சீமைக்கருவேல மரம், புதர்கள் இல்லாமல் பராமரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆற்றை காப்பாற்றலாம் என்றனர்….

The post தொடர் பராமரிப்பு பணிகளால் 300 கண்மாய்களை நிரப்பி சென்ற மணிமுத்தாறு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Manimutthar ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்