- அமைச்சர்
- வேலு
- கலாலகுரிச்சி
- அமைச்சர்கள் உதவி செயலாளர்
- ஸ்டாலின்
- மா.
- சுப்பிரமணியன்
- அமைச்சர் ஏ.
- தின மலர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு,” விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் சார்பில் அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் முறையாக பணியாற்றி இருந்தால் இப்படி நடந்திருக்காது, எனவே மாவட்ட எஸ்பி-ஐ உடனடியாக சஸ்பெண்ட் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். அவர் மட்டுமின்றி துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என இச்சம்பவம் தொடர்பான அனைத்து அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆய்வு செய்து 2 நாளில் அறிக்கை அளிக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விஷச் சாராயம் குடித்த 132 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 27 பேர் குடும்பத்துக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
விஷச் சாராய விற்பனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விஷச் சாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் உள்ளன. விஷச் சாராய விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அரசு அமைத்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.