×

தொழில் நஷ்டத்தை தவிர்க்க ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலத்தை இருபிரிவாக மாற்றியமைக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜூன் 20: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வருங்காலத்தில் மீன்பிடி தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க மீன்பிடி தடைக்காலத்தை இருபிரிவுகளாக மாற்றிய மைக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் அமல்படுத் தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்பிடி, இறங்கு தளங்கள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில், சுமார் 146 விசைப்படகுகளும், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களாக இருந்த நிலையில். தற்போது 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகளுக்கு மீன் பிடிக்கத் தடை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு மீன வர் நல்வாரிய துணைத் தலைவர் மல்லிபட்டினம் தாஜூ தீன் கூறியதாவது: மீன்களின் இனப்பெருக்க காலம் எனக்கூறி மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆர்வத்தோடு செல்லும் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். ஒரு சில தினங்கள் மட்டுமே அதிக அளவில் மீன்கள் பிடிபடுகின்றன. தற்போது கோடைக்காலத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் என்பதை மாற்றி, ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை ஒரு மாதமும், அதிக மழை, புயல், இயற்கை சீற்றம் ஏற்படும் நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை என ஒரு மாதமும் 2 முறைகளாக மீன் பிடித்தடைக்காலத்தை மாற்றி அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது: மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை செயல்படுத்தாமல் கட்டி வைப்பதால், 2 மாதம் கழித்து மீண்டும் படகுகளை, இயக்கும்போது ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. தடைக்காலம் முடிந்த பின் மீனவர்கள் தங்கள் படகுகளை, பழுது நீக்கம் செய்து, செயல்படுத்த வசதியாக குறைந்த வட்டி விகிதத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஓராண்டு தவணையில் கடன் வழங்க வேண்டும் என்று கூறினார்.

The post தொழில் நஷ்டத்தை தவிர்க்க ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலத்தை இருபிரிவாக மாற்றியமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tanji District Sedubawasatram ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...