×

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு சென்னை ரயிலில் வந்தவரிடம் ₹1.33 கோடி நகை பறிமுதல்

விழுப்புரம், ஜூன் 20: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்தவரிடம் ரூ.1.33 கோடி நகை பறிமுதல் செய்யப்பட்டது. அது கடத்தல் தங்கமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக தென் மாவட்டம் மற்றும் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் சட்டவிரோதமாக நகை, பணம், கடத்தல் பொருட்கள், ஹவாலா பணம் கடத்திச் செல்லப்படுகிறதா என்று அவ்வப்போது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ரயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 6வது நடைமேடையில் சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்தியபோது தங்க நகைகளும், ஏராளமான தங்க கட்டிகளும் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், விழுப்புரம் புது தெருவை சேர்ந்த வரதராஜன்(49) என்பது தெரிய வந்தது. அவர் கொண்டு வந்த நகை, தங்க கட்டிகள் சுமார் 2000 கிராம் என்பதும், இதன் மதிப்பு ரூ.1.33 கோடி என தெரியவந்தது. இதனிடையே இவர் கொண்டு வந்த நகை, தங்கக் கட்டிகளுக்கான ஆவணங்களை கேட்டபோது எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கடத்தல் தங்கமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு கடலூர் சரக்கு மற்றும் சேவை வரி துறையின் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்தவர்கள் வரதராஜனிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இவைகள் கடத்தல் தங்கம் என்பது குறித்தும் விசரணை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த 2000 கிராம் தங்க நகை, தங்க கட்டிகளை பறிமுதல் செய்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலரிடம் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஒப்படைத்தனர். இந்த நகை, தங்க கட்டிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் திரும்ப அவரிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் வரதராஜன் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post விழுப்புரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு சென்னை ரயிலில் வந்தவரிடம் ₹1.33 கோடி நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Villupuram railway station ,Villupuram ,South District ,Delta ,
× RELATED விஷ சாராயம் தயாரிக்க பயன்படும்...