- தாதா கர்ணன்
- புதுச்சேரி
- புதுச்சேரி சிறை
- சிறப்புப் படை போலீஸ்
- கோயம்புத்தூர்
- அனிதா
- நகர்
- முதலியார்பேட்டை
புதுச்சேரி, ஜூன் 20: புதுச்சேரி சிறையில் இருந்து பரோலில் வந்து மாயமான ஆயுள் தண்டனை கைதி பிரபல தாதா கர்ணாவை தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பிரபல தாதா கர்ணா (எ) மனோகரன் (50). இவர் 1997ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புதுச்சேரி மத்திய சிறையில் கடந்த 23 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கடந்த 11ம் தேதி 3 நாள் பரோலில் வந்தார். கடந்த 13ம் தேதி சிறைக்கு மீண்டும் செல்ல வேண்டும். ஆனால் அவர் சிறைக்கு செல்லாமல் குடும்பத்துடன் தலைமறைவானார்.
இதுகுறித்து சிறைத்துறை எஸ்.பி. பாஸ்கரன் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து, கர்ணாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தனர். ஆனால் 5 நாட்கள் ஆகியும் அவரை கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையே கர்ணா பரோலில் வர ஜாமீன் கொடுத்த அவரது உறவினரான தியாகுமுதலியார் வீதியை சேர்ந்த முருகன் (50), பூரணாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (47) மற்றும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அனிதா நகரில் உள்ள கர்ணாவின் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கர்ணா அவரது உறவினர் ஒருவரிடம் மொபைலில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கடைசியாக பேசிய எண்ணின் விபரங்களை வைத்து விசாரிக்கும் போது அவர் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையிலான போலீசார் கோவை சென்று உப்பிலிப்பாளையத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த கர்ணாவை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கர்ணா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், தனக்கு விதித்த ஆயுள் தண்டனை காலம் முடிந்துவிட்டது. விடுதலை செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தும் கிடைக்கவில்லை. தன்னுடன் இருந்த அனைவரும் விடுதலையாகி ெசன்றுவிட்டனர். இதனால் தனிமையாக உள்ளதால் மனஉலைச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு உள்ளவர்கள் என்னுடைய வயதை சுட்டிக்காட்டி கேலி கிண்டல் செய்கின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த முறை பரோலில் வந்தபிறகு அரசியில் கட்சியினரை சந்தித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தேன். அவர்கள் கமிட்டியில் வைப்பதாக கூறினர், இருப்பினும் போலீசார் என்னை விடமாட்டார்கள். ஆகவே தான் குடும்பத்துடன் இருக்க ஆசைப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானேன். என் குடும்பத்தினர் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டனர். நான் கேரளாவில் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு குடும்பத்துடன் வாழ நினைத்தேன். இந்த சம்பவத்துக்கும் குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இவ்வாறு கூறினர். இதையடுத்து கர்ணா தப்பி செல்ல உதவிய அவரது தம்பி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை தாதா கர்ணா உள்ளிட்ட 6 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post பரோலில் வந்து தலைமறைவான தாதா கர்ணா சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.