- திருவள்ளூர்
- திருவள்ளூர்
- மாவட்ட கலெக்டர்
- டி. பிரபு சங்கர்
- திருவள்ளூர் வட்டம்
- திருவள்ளூர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
திருவள்ளூர், ஜூன் 20: திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருவள்ளூர் வட்டத்திற்கு உட்பட்ட பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மருந்துகள் இருப்பு, மகப்பேறு பிரிவு ஆகிய பிரிவுகள் மற்றும் வெளி நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டு சுகாதார நிலையத்தினை சுத்தமாகவும் சுகாதாரமும் வைத்துக் கொள்ள வேண்டும். வரும் நோயாளிகளை கணிவுடன் பரிசோதித்து சிறந்த முறையில் சிகிச்சை அளித்து சத்தான உணவுகளை உண்பதற்கு நோயாளிகளிடம் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ₹4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டை பார்வையிட்டு மழைக்காலத்திற்கு முன் வீட்டினை கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயனாளிக்கு அறிவுறுத்தினார். அதேபோல் மோவூர் ஊராட்சி சதுரங்கப்பேட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், குழந்தைகள் எடை, உயரம் ஆகியவைகளை குறித்து ஆய்வு மேற்கொண்டு, உணவினை குழந்தைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன் பரிசோதிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் குழந்தைகளின் எடை மற்றும் உயரங்களை பெற்றோர்கள் முன்னிலையில் கணக்கீடு செய்து சத்தான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் சதுரங்கப்பேட்டையில் இருந்து மோவூர் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலையின் தரம் மற்றும் நீளம் அகலம் சரியான முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
சிறுவானூர் கண்டிகை தொடக்கப் பள்ளியில் சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெரும்பாக்கம் பகுதியில் ₹304.88 கோடி மதிப்பீட்டியில் தேசிய நெடுஞ்சாலை 205 சாலை கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கசவநல்லாத்தூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்களின் இருப்பு, பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும்போது இன்முகத்துடன் காக்க விடாமல் உடனடியாக பொருட்கள் வழங்க வேண்டும் என அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் வளர்ச்சி என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஆனந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் மீரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கௌசல்யா, தனித்துணை கலெக்டர் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், திருவள்ளூர் வட்டாட்சியர் செ.வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பழவேற்காடு பகுதியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்
பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் படகு சவாரி அமைப்பதற்கான பணி சுற்றுலாத் துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்படவுள்ள திட்டத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழவேற்காடு பகுதி சுற்றுலாத் தலத்திற்கான அனைத்து வசதிகள் உள்ளதால் இங்கே படகு சவாரி அமைத்தால் சிறப்பாக அமையும். மேலும், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். பழவேற்காடு பகுதி மக்கள் வாழ்வாதாரம் உயர்வதற்கு இத்திட்டம் சிறப்பாக அமையும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், சப் கலெக்டர் சங்கத் பல்வந்த் வாஹே, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜராஜன், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொறியாளர் ரமேஷ், சுற்றுலா தொழில்நுட்ப ஆலோசகர் சிவசங்கரி, வன சரக ஆய்வாளர் ரூபஸ் லெஸ்லி, வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
The post உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் வட்டத்தில் பணிகளை ஆய்வு செய்தார் கலெக்டர் appeared first on Dinakaran.