×

வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டி ஆக்கிரமிப்பு தடுக்க குழுக்கள் அமைப்பு: ஆர்பிஎப், வணிக பிரிவு நடவடிக்கை

சேலம்: தமிழ்நாடு, கேரளாவில் இருந்து செல்லும் வட மாநில ரயில்களின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவில்லா டிக்கெட் வைத்திருக்கும் நபர்கள் ஏறுவதை தடுக்க ஆர்பிஎப் மற்றும் வணிக பிரிவு அலுவலர்கள் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில், வட மாநிலங்களான உ.பி., ஒடிசா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

இவர்கள், தங்கள் குடும்பத்தோடு தங்கியிருந்து கட்டுமான தொழில், கோழிப்பண்ணை, நூல் மில்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பனியன் கம்பெனிகள் போன்றவற்றில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக்கொண்டு, முன்பதிவு பெட்டிகளில் ஏறி அதனை ஆக்கிரமித்து பயணிக்கின்றனர்.

இதன்காரணமாக முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் புக்கிங் செய்த பயணிகள், குறிப்பிட்ட ரயிலில் ஏறக் கூட முடியாமல் தவிக்கின்றனர். கூட்டத்தையும் மீறி ஏறிக்கொண்டால், அவர்களுக்குரிய இருக்கையை முறையற்று ஏறிய பயணிகள் கொடுக்க மறுக்கின்றனர். இதனால், வட மாநிலங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் பெரும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் ஹவுரா எக்ஸ்பிரசில் முன்பதிவு பெட்டிகளை இதர நபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால், அந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் புக்கிங் செய்திருந்த பயணிகளால் ரயிலில் ஏறவே முடியவில்லை.

அவர்களது பயணம் ரத்தானது. இது ரயில்வே அமைச்சகம் வரை புகாராக சென்றது. இதையடுத்து தற்போது, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாடு, கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் மற்றவர்கள் ஏறுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களிலும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வணிக பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஆர்பிஎப் போலீசார் அடங்கிய தனிக்குழுவினர், வட மாநில ரயில்களின் முன்பதிவு பெட்டிகளை கண்காணித்து வருகின்றனர். ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் ரயில் வந்து நின்றதும், அதிலுள்ள முன்பதிவு பெட்டியில் முன்பதிவில்லா டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளோ, காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளோ ஏறுவதை தடுக்கின்றனர். மீறி ஏறியிருந்தால், அவர்களை கீழே இறக்கி அபராதம் விதித்து வருகின்றனர்.

* ரயிலில் இடமில்லாதபோது முன்பதிவில்லா டிக்கெட் ஏன் கொடுக்க வேண்டும்?
தமிழ்நாடு, கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பெல்லாம் 5 அல்லது 6 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். தற்போது 2 அல்லது 3 முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே இருக்கிறது. மற்ற பெட்டிகளை மூன்றடுக்கு ஏசி அல்லது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியாக ரயில்வே மாற்றிக்கொண்டுள்ளது.

இதன்காரணமாக முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அந்த பெட்டிகளில் இடமின்றி முன்பதிவு பெட்டியை ஆக்கிரமிக்கின்றனர். இதனால், மீண்டும் பழையபடி வட மாநில ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களிலும் ஏழை மக்கள் பயணிக்கும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட அளவிற்கு மேல் முன்பதிவில்லா டிக்கெட் கொடுப்பதை ரயில்வே நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரயில் பயணிகள் நலக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

The post வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டி ஆக்கிரமிப்பு தடுக்க குழுக்கள் அமைப்பு: ஆர்பிஎப், வணிக பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : to ,RPF ,Salem ,Commercial Division ,North State ,Tamil Nadu, Kerala ,Tamil Nadu ,Kerala ,states ,UP ,Odisha ,Dinakaran ,
× RELATED காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு...