×

வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்: ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல்

திருமலை: தேர்தலில் வாக்குசீட்டு முறை கொண்டு வர வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலத்தில் அண்மையில் நடந்த பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 164 பேரவை தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளான தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜ வேட்பாளர்கள் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்து சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தல் தோல்விக்கு பிறகு, பல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல்பாடு குறித்து சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘நீதி கிடைத்தது என்று இல்லை. ஜனநாயக முறைப்படி நீதி கிடைத்ததா? என்று தெரிய வேண்டும். உலகெங்கிலும் வளர்ந்த ஒவ்வொரு ஜனநாயக நாடுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக காகித வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக காகித வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும்’ என்று ஜெகன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* எலான் மஸ்க் போல பேசுகிறார் தெலுங்கு தேசம் எதிர்ப்பு
ஜெகன் மோகன் ரெட்டியின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. “கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது, ​​ஜெகன் மோகன் ரெட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோவை தெலுங்கு தேசம் கட்சியினர் அதிகாரப்பூர்வ ட்விட்டர்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் 151 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் போது மின்னனு இயந்திரம் அருமையாக வேலை செய்ததாக ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். இப்போது 11 இடங்கள் மட்டும் கிடைத்துள்ளதால் இயந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதாக கூறுவது நல்லதல்ல. ஜெகன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஜெகன் மோகன் ஆந்திராவின் எலான் மஸ்க் போல பேசுகிறார். வெற்றி பெற்றால் மின்னனு இயந்திரம் நல்லது, தோற்றால் சரியில்லை என்பதா? கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் ஜெகன் மோகன் வெற்றி பெற்றபோது, ​​ஈவிஎம்கள் குறித்து ஜெகன் மோகன் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜெகன் மோகன் தன்னைப் மக்கள் ஏன் புறக்கணித்தனர் என்று ஆலோசிக்க தொடங்க வேண்டும்” என்று பதிவு செய்துள்ளனர்.

The post வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்: ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jaganmohan Reddy ,Tirumala ,Former ,Chief Minister ,Andhra Pradesh ,YSR Congress ,
× RELATED ஆந்திர தேர்தலில் தோல்வி; ஜெகன்மோகனை பார்த்து கதறி அழுத தொண்டர்கள்