×

மனைவியுடனான தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் கணவன் கட்டையால் அடித்து படுகொலை

பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே மனைவியுடனான தகாத உறவை கண்டித்த கணவனை, கட்டையால் அடித்துக்கொலை செய்த கள்ளக்காதலனை கைது செய்து, அவரது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (35). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். ரவிக்கும், ஒரகடம் பகுதியில் பானிபூரி கடை நடத்திவரும் திருப்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவருக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நெருங்கிய நண்பர்களாக பழகியுள்ளனர். இதன்காரணமாக, மணிகண்டனை தனது வீட்டுக்கு ரவி அடிக்கடி அழைத்து வந்துள்ளார்.

அவரது வீட்டில் சாப்பிட்டு சகஜமாக பழகி வந்துள்ளார். இதனால், மணிகண்டனுக்கும், மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதன்பிறகு ரவி இல்லாத சமயத்தில் மணிகண்டன் அடிக்கடி வீட்டுக்கு வந்து மணிமேகலையுடன் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி ரவிக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்து, மணிகண்டனை சந்தித்து என் மனைவியுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அடிக்கடி என் வீட்டுக்கு வரக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மணிகண்டன் நடத்திவரும் பானிபூரி கடைக்கு சென்ற ரவி, ‘என் மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும்’ எனக்கூறி அவருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது தம்பி கோபி ஆகியோர் சேர்ந்து, அங்கு கிடந்த பெரிய கட்டையால் ரவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனைகண்டதும், 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரகடம் போலீசார், ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி மணிகண்டனை கைது, அவரது தம்பி கோபியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கைதான மணிகண்டனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post மனைவியுடனான தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் கணவன் கட்டையால் அடித்து படுகொலை appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,Kanchipuram District, Panaiyur ,Orakadam ,
× RELATED பெரும்புதூர் அருகே பரபரப்பு தீப்பற்றி எரிந்த கார் நாசம்