×

வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களுக்கு தடை அமலானது: மீறி ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும், தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: வெளி மாநிலங்களில் பதிவு செய்து, அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான தடை நேற்று முதல் அமலானது. மீறி ஓட்டினால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு முழுவதிலும் 1,535 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னி பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன. இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளால் அரசுக்கு, பேருந்து ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு ஏற்படுகிறது.

மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர்.

இதை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநில பதிவெண் கொண்ட, அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ஆம்னி பேருந்துகளில் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே முறையாக தங்களது பிற மாநில பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இன்னும் 800 ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்கு புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இத்தகையவர்களால் அரசிற்கு ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.

அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் அதனை முறைகேடாக பயன்படுத்தி அரசு போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் மற்றும் விதிகளின்படி முறையாக இயங்கி வரும் ஆம்னி பேருந்துகளின் இயக்கங்களை சீர்குலைக்கும் விதமாக பயண கட்டணங்களை வெகுவாக குறைத்து, முறைகேடாக இயக்கி வருவதால் அரசு பேருந்துகளுக்கும், முறையாக இயங்கி வரும் இதர ஆம்னி பேருந்துகளுக்கும் கடுமையான நிதி இழப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

இவர்களின் இந்த போக்கு தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் மற்றும் முறையாக இயங்கும் ஆம்னி பேருந்துகளின் இயக்கங்களையே சீர்குலைக்கும் விதமாக உள்ளது. மேலும், இத்தகைய பிற மாநில ஆம்னி பேருந்துகளின் முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்போது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, அவர்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராய்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கடந்த 13ம் தேதி அன்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் அடிப்படையிலும், அதை தொடர்ந்து பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பின் அடிப்படையிலும் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் உடனடியாக சிறைபிடிக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அத்தகைய ஒரு ஆம்னி பேருந்தும் இனி இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (சோதனைச்சாவடிகள் மற்றும் செயலாக்க பரிவில் பணிபுரிபவர்கள் உள்பட) உடனடியாக அவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொதுமக்கள் எவரும் அத்தகைய விதிகளை மீறி தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

அரசின் எச்சரிக்கையை மீறியும், விதிகளை மீறியும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இனி முடக்கப்படுவதால் பொதுமக்கள் அவற்றில் பயணம் செய்ய இயலாது. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. மாறாக, அவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடமே பாதிப்பிற்கான நிவாரணத்தை பெற முடியும். தமிழ்நாட்டிற்குள் முறையாக 1,535 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருவதால், பொதுமக்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான இடர்பாடுகளும் எழ வாய்ப்பில்லை.

இந்த எச்சரிக்கையை மீறி, இன்று பயணிகள் எவரேனும் அத்தகைய விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகளிலிருந்து இறக்கி விடப்பட்டால், மாற்று ஏற்பாடாக அவர்களின் ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன.

இதுகுறித்து அந்தந்த மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தொடர்புடைய தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலர்களுடனும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களையும் தொடர்பு கொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின்படி இயங்கும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மட்டுமே சிறைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துதர ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், நிருபர்களை சந்தித்த அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு முதல் படுக்கை வசதிகளுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டன. அதற்கு முன்பு இந்த உரிமம் அளிக்கப்படாததால் பிற மாநிலங்களில் பதிவு செய்து இயக்கி வந்தோம்.

பதிவெண்களை மாற்ற அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில் கடந்த 6 மாத காலமாக பதிவெண்களை மாற்ற அவகாசம் வழங்கப்பட்டன. இருப்பினும், விழாக்காலம், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அனைத்து பேருந்துகளையும் மாற்ற முடியவில்லை. தமிழகத்தில் பதிவு செய்த பேருந்துகளை ஒப்பிடும்போது வெளிமாநில பேருந்துகளுக்கு அதிக சாலை வரிசெலுத்தி இயக்கி வருகிறோம். இதில் வரி ஏய்ப்பு எதுவுமில்லை. இருப்பினும், தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப வெளிமாநில பதிவெண் பேருந்துகளை இனி இயக்க மாட்டோம்.

தமிழக பதிவெண்களை மாற்ற அரசிடம் ஒரு மாத காலம் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறோம். ஏனெனில், ஒரு பேருந்தை நம்பி 12 தொழிலாளர்கள் உள்ளனர். மேலும், வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அங்கிருந்து மாற்றம் செய்வதற்கு என்.ஓ.சி தேவைப்படுகிறது. ஆனால், என்ஓசி கிடைப்பதற்கு தாமதமாகிறது. மேலும், தமிழகத்தில் பதிவு செய்யும் போது அதனை உடனடியாக பதிவு செய்து தரவும் போக்குவரத்து துறை உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். ஏற்கனவே, முன்பதிவு செய்த டிக்கெட் மாற்று வாகனத்தில் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களுக்கு தடை அமலானது: மீறி ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும், தமிழக அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...