×

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது: டிடிவி தினகரன்

சென்னை: தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது என்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலத்துக்கும் பொதுவான ஒன்றிய நீர்வளத் துறை இணையமைச்சர் கர்நாடக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் மேகதாது அணை குறித்த அமைச்சர் சோமண்ணாவின் பேச்சு தமிழ்நாடு விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது – அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தையின் மூலம் மேகதாது அணைத் திட்டம் தொடங்கப்படும் என மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணா கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், மேகதாது அணை குறித்த அமைச்சர் சோமண்ணாவின் பேச்சு தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக நியமிக்கும் போதே, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் குரல்களை நியாயமாக்கும் வகையில் அவரது செயல்பாடுகளும் ஒருதலைபட்சமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பது சோமண்ணா வகிக்கும் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, இனியாவது இரு மாநிலங்களுடையேயான பிரச்னைகளை அதிகப்படுத்தும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தவிர்ப்பதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என சோமண்ணாவை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Meghadatu Dam ,Tamil Nadu ,DTV Dhinakaran ,CHENNAI ,AAMUK ,general secretary ,TTV ,Dinakaran ,Union Minister of State for Water Resources ,Karnataka ,
× RELATED தமிழ்நாடு மின் வாரியத்தில் காலி...