×

பிரியாத வரம் தரும் ஜாதகப் பொருத்தம்

திருமணத்துக்காக பார்க்கும் பத்து பொருத்தங்களின் தாத்பரியத்தைப் பார்த்தோம். இந்தப் பத்தோடு மட்டும் மணப் பொருத்தம் முடிவதில்லை. உற்றுப் பார்த்தால் பத்தும் ஆண், பெண் என இருவருக்குள்ளும் நிகழவிருக்கும், நிகழும் விஷயங்களைத்தான் பேசுகின்றன. வெறும் இருவர் சம்பந்தப்பட்டதாகத்தான் நட்சத்திரப் பொருத்தங்கள் இருக்கும். ‘நாம் இருவரும் எப்படி’ எனும் அடிப்படைதான் நட்சத்திரப் பொருத்தம். ஆனால், நம்மைச் சுற்றிலும் உலகம் உண்டு; உற்றார், உறவினர்கள் உண்டு. எல்லாவற்றையும் தாண்டி நாம் பிறந்த அன்று கிரகங்களின் நிலையைச் சொல்லும் ஜாதகமும் உண்டு. அவற்றையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். அதைத்தான் ஜாதகப் பொருத்தம் என்பார்கள்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நட்சத்திரத்தைக் கொண்டு பொருத்தம் பார்த்தோம் அல்லவா? இப்போது இருவரின் ஜாதகங்களையும் வைத்து, கிரகங்கள் எங்கெங்கு எப்படி உள்ளன என்று ஆராய வேண்டும். நட்சத்திரப் பொருத்தமும் ஜாதகப் பொருத்தமும் ரயில் தண்டவாளம் போன்றது. இரண்டும் சேர்ந்துதான் திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

‘‘ஒரு ஜெனரல் ஹெல்த் செக்கப் பண்ணிட்டா நல்லது’’ என்று மருத்துவர் கூறினால், அதுதான் நட்சத்திரப் பொருத்தம். அதிலேயே, ‘‘இந்த சிம்டம்ஸ் வந்தா, தனியா அந்த இடத்தை மட்டும் ஸ்கேன் பண்ணிப் பார்த்துடறது நல்லது’’ என்று சொன்னால் அதுதான் ஜாதகப் பொருத்தம்.

‘‘உங்களுக்கும் எனக்கும் என்னங்க சண்டை? ஆனா, உங்கம்மா ஏன் நமக்குள்ள பிரச்னையை உண்டு பண்றாங்க’’ எனும்போது நட்சத்திரப் பொருத்தம்கூட தள்ளிதான் நிற்கும். ஏனெனில், நட்சத்திரப் பொருத்தம் என்பது தம்பதிக்குள் பொருத்தம் எப்படி என்று மட்டும் பார்க்கும். ஆனால் ஜாதகப் பொருத்தம், நம்மைச் சுற்றியுள்ளோரைப்பற்றி நம்முடைய ஜாதகம் என்ன சொல்கிறது என விரிவாக அலசும். இதை இரண்டு பேர் ஜாதகத்தையும் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.

‘‘பையனுக்கு பெண்ணைப் பிடித்திருக்கிறது. பெண்ணுக்கு பையனைப் பிடித்திருக்கிறது. பொருத்தங்களும் நன்றாக உள்ளன. ஆனால், பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரைப் பற்றிச் சொல்லும் இடத்தில் பகைக்கோள் இருக்கிறது. தினமும் சண்டை. புருஷனிடம் பஞ்சாயத்து. ‘உங்க ரெண்டு பேர் சண்டையில நான் எங்கேயாவது ஓடிப் போயிடலாம்போல இருக்கு’ என்கிற புலம்பல் அதிகரிக்கும். இந்த பிரச்னைகளை ஜாதகப் பொருத்தம் பார்த்து ஓரளவு தவிர்க்கலாம். ‘உனக்கு அம்மான்னா… எனக்கும் அவங்க அம்மாதான்’ என்று மனம் பக்குவம் பெறும்போது மாமியார் தாயாகிறார். நாத்தனார் நட்போடு இருப்பார். குடும்பத்தில் குதூகலத்திற்கு பஞ்சம் இருக்காது.

நட்சத்திரப் பொருத்தம் என்பது சல்லி வேர்களைப் போன்றது. ஜாதகப் பொருத்தம் என்பது ஆணிவேரைப் போன்றது. ஆணிவேர் வலிமையாக இருப்பின் மரம் விழாது. நட்சத்திரப் பொருத்தம் பொதுவான மனநலன்களையும், குணநலன்களையும் தீர்மானிக்கின்றன. எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை அமைய வேண்டும்; எங்கிருந்து அமையும்; கல்வி, வசதி வாய்ப்பு, சொந்தமா அல்லது அசலா என்று நான்கு முனைகளிலும் நின்று யோசிப்பது ஜாதகப் பொருத்தம். சஷ்டியப்த பூர்த்தியிலிருந்து சதாபிஷேகம் வரை நீட்டிக்கக் கூடியதுதான் ஜாதகப் பொருத்தம். ‘தாயை தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் போய் பார்க்க வேண்டாம்’ என்பார்கள். அதுபோல ஜாதகப் பொருத்தம் பார்த்து விட்டால் பெண்ணை நேரில் பார்க்காமல் கூட முடிவெடுக்கலாம்.

தாயுள்ளத்தோடும் கருணையோடும் குடும்பம் நடத்தி, உற்றார் உறவினர்களை அனுசரித்து, நன்மக்களை சமூகத்திற்காக உருவாக்கும் பொருத்தமாகும். நட்சத்திரப் பொருத்தம் தனிக்குடித்தனம் எனில் ஜாதகப் பொருத்தம் கூட்டுக் குடும்பத்தையே வழிநடத்திச் செல்லக் கூடியதாகும்.

‘‘வேலைக்கு சேர்ந்தான். மளமளன்னு முன்னேறிட்டான். திரும்பி பார்க்கறதுக்குள்ள எங்கேயோ போயிட்டான்’’ என்று சொன்னால் ஜாதகப் பொருத்தம் வேரூன்றி இருக்கிறது என்பது பொருள். அப்படியானால் நட்சத்திரப் பொருத்தத்தில் அப்படிப்பட்ட முன்னேற்றம் இருக்காதா என்ற கேள்வி வரலாம். இருக்கும். ஆனால், நட்சத்திரப் பொருத்தத்தில் ஒரு நிலையான தன்மை இருக்காது. ‘‘மாப்பிள்ளை நல்லாத்தான் இருக்காரு. ஆனா, அப்பப்போ லோன் வாங்க வேண்டியதா இருக்கு. தட்டுத்தடுமாறி இப்போதான் மனை வாங்கியிருக்காரு’’ என்பார்கள். ஆனால், ஜாதகப் பொருத்தமும் சேர்ந்திருப்பின், ‘‘கிரவுண்ட் வாங்கி வீடே கட்டிட்டாரு’’ என்கிற வளர்ச்சி இருக்கும்.

நட்சத்திர மண்டலங்களிலிருந்து வரும் ஒளிக் கீற்றும், கிரக மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றையும் சந்திக்கும்போது யுத்தம் வந்து விடக்கூடாது. அதாவது நட்சத்திர பொருத்தங்களும், ஜாதகத்திலுள்ள கிரகங்களும் எதிரெதிர் தன்மையில் இயங்கக் கூடாது. இரண்டும் ஒத்துப் போய்விட்டால், ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டிய அவசியம் இருக்காது.

‘‘நாலு வருஷம் கழிச்சு குழந்தை பிறந்தது. அஞ்சு வருஷம் கழிச்சுதான் நல்ல வேலை அமைஞ்சுது. பத்து வருஷம் கழிச்சுதான் நல்ல பிளாட் வாங்க முடிஞ்சுது’’ என்பதெல்லாம் நட்சத்திரப் பொருத்தம் சரியாக இருந்தால் மட்டும் நடக்கக் கூடியது. வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாமே கிடைக்கும். என்ன… கொஞ்சம் போராடியபிறகு கிடைக்கும். ஜாதகப் பொருத்தமும் சரியாக இருந்து விட்டால் இதன் வேகம் அதிகரிக்கும்.

‘‘கல்யாணம் முடிக்கும்போதெல்லாம் அந்த ஊரு எம்.எல்.ஏக்கு கார் கதவைத் திறந்து விட்டுக்கிட்டிருந்தாரு. அடிப்பொடி வேலையெல்லாம் பார்ப்பாரு. மூணு வருஷத்துல எப்படியோ கட்சித் தலைவருக்கு நெருக்கமாயிட்டாரு. எம்.எல்.ஏவே இவரைப் பார்த்தா எழுந்து நிக்கறாரு’’ என்று யாராவது பேசினால், அந்தத் தம்பதி ஜாதகப் பொருத்தம் உள்ளவர்கள். அப்படியொரு அசுர வளர்ச்சி இருக்கும்.

ஜாதகப் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும் என்பதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். தினப் பொருத்தம் இருந்தால் தினசரி பேச்சுவார்த்தைகள், உரையாடல்களில் பிரச்னை இல்லாமல் இருப்பார்கள் என்று பார்த்தோம். ஆனால், ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாவது இடமான வாக்கு ஸ்தானத்தில் ஆறுக்குரிய கிரகமோ அல்லது எட்டுக்குரிய கிரகமோ இருந்தால் வாயைத் திறந்தாலே வம்பு தும்புதான் வெடிக்கும். நட்சத்திரப் பொருத்தம் இருப்பதால் பிரிய மாட்டார்கள். ஆனால், கட்டிக் கொண்டு மல்லுக் கட்ட வேண்டியிருக்கும். ஜாதகப் பொருத்தம் இல்லையெனில் முழுமையான சந்தோஷம் இருக்காது.

‘‘அவ அப்பப்போ இப்படித்தான் கத்துவா. அடுத்த அஞ்சாவது நிமிஷம் வந்து நின்னு ஸாரி சொல்லுவா’’ என்று வாழ்க்கை நகரும். ‘‘எங்களுக்கு எல்லா பொருத்தமும் பார்த்துத்தானே கல்யாணம் பண்ணாங்க. ஆனா, சண்டை வருதே’’ என்போருக்கு மேலே சொன்னதுதான் பதில்.

இதுபோலவே மகேந்திரப் பொருத்தம், யோனிப் பொருத்தம் போன்றவை இருந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது உண்மைதான். ஆனால், இருவரின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்தையும் பார்க்க வேண்டும். அந்த ஐந்தாம் இடத்தில் தீய கோள்கள் இருந்து, ஐந்துக்குரிய கிரகம் மறைந்திருந்தால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். சிலருக்கு செயற்கைக் கருவின் மூலம் குழந்தை பிறக்கும். அதே நேரத்தில் நட்சத்திரப் பொருத்தமும் இருந்து, ஜாதகப் பொருத்தமும் இருந்தால் தாமதமில்லாது குழந்தை பிறக்கும். அறிவோடு அழகும் சேர்ந்த குழந்தை பாக்கியம் கிட்டும். அடுத்ததாக ரஜ்ஜுப் பொருத்தம் என்கிற தாலிபாக்கியத்தை பற்றிப் பார்த்தோம். ஜாதகப் பொருத்தம் என்று வரும்போது இருவரின் ஜாதகத்திலேயும் ஏழாமிடம், எட்டாமிடத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

‘‘எங்ககிட்ட மரியாதையா நடந்துக்கறாரு… ஆனா, என்னமோ தெரியலை… எங்க பொண்ணுகிட்ட மட்டும் பாசம் காட்டறதில்லை’’ என்பார்கள். இதற்குக் காரணம் இருவரின் ஜாதகத்திலேயும் ஏழு, எட்டாமிடத்திற்குரிய கிரகங்கள் முரண்பாட்டோடு அமைந்திருப்பதுதான். தாலிப் பொருத்தம் இருந்தும் கணவன் மனைவிக்குள் மோசமான பிரிதல் சமயங்களில் நேரும். இதற்குக் காரணமே அடுத்தடுத்து இருவருக்கும் வரக்கூடிய மோசமான தசாபுக்திகள்தான். ஆகவே, ‘‘ஏற்கனவே உங்க பொண்ணுக்கு ஏழாவது வீட்ல கேது இருந்து கேது தசை நடந்திருக்கு. பையனுக்கு எட்டாவது வீட்ல ராகு இருந்து ராகு தசை நடக்குது. ரெண்டு பேருக்கும் பத்து பொருத்தம் இருந்தாலும் தசாபுக்தி சரியில்லை. அதனால சேர்க்க வேண்டாம்’’ என்று ஜோதிடர் தள்ளி வைத்து விடுவார். இருவருக்கும் மோசமான தசாபுக்திகள் நடைபெறும்போது சேர்த்தால் இழப்புகளை ஈடுகட்ட முடியாது.

இவ்வளவு தூரம் ஒவ்வொரு பொருத்தத்தையும் பார்க்க வேண்டுமா?

ஆமாம். வீடு கட்டினால் சிலர் இடிதாங்கியோடு சேர்த்துக் கட்டுவார்கள். பூகம்பம் வந்தால் கூட பாதிக்கப்படாதவாறு சிலர் பார்த்துக் கட்டுவார்கள். அதுபோலத்தான் எவ்வளவுக்கு எவ்வளவு துல்லியமாக பார்த்து விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. வண்டிக்கு பெட்ரோல் போடுகிறீர்கள்; இது நட்சத்திரப் பொருத்தம். கூடவே எஞ்சின் ஆயிலும் சேர்க்க வேண்டும்; இதுதான் ஜாதகப் பொருத்தம். வண்டி ஓடுவது முக்கியமல்ல. அது லகுவாக நகர வேண்டும். சீராக இயங்க வேண்டும். அதுதான் முக்கியம். சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தால் யாரும் அலுத்துக் கொள்வதில்லை. அப்படி வரத்தான் செய்யும். ஆனால், கழுத்தை நெரிக்கும் அளவுக்கு வந்தால் என்ன செய்வது? அப்படி பெரிய தொந்தரவுகளைத் தவிர்க்கவே ஜாதகப் பொருத்தம். கணவனும் மனைவியும் ‘ஓருயிர் ஈருடல்’ என்பார்களே… அப்படி வாழ வேண்டும். இருவராக இருந்தாலும் ஒரே மனம் வேண்டும். அந்த பக்குவத்தையும் நிலையையும் அருள்பவரே திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர். அவரை தரிசியுங்கள். நீங்கள் ஆணாக இருந்தால் பெண்ணின் மனநிலை உங்களுக்குப் புரியும். பெண்ணாக இருந்தால் ஆணின் மனநிலையைத் தெளிவாக அறிவீர்கள். பிரச்னைகள் தானாகக் குறையும். பொருத்தங்களையும் தாண்டி வேறொரு முக்கியமான விஷயத்தையும் பார்க்க வேண்டும். அதுதான் முகூர்த்த நாள், முகூர்த்த நேரம், நட்சத்திரம், திதி போன்ற விஷயங்கள்…

The post பிரியாத வரம் தரும் ஜாதகப் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Priya Bountiful ,
× RELATED தீவினைகளை களையும் சிவா எனும் நாமம்!