திருத்தணி: திருத்தணியில் நேற்று முன்தினம் சுமார் ஒருமணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் ஏற்ப்பட்டது. திருமணம் நிகழ்ச்சி மற்றும் கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழைக்கு பாதிக்கப்பட்டனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த மாபொசி சாலையில் ரயில் நிலையம் அருகில் மழைநீர் வடிகால்வாயை ரயில்வே நிர்வாக அடைத்து விட்டதால், மழைநீர் வெளியேற வசதியின்றி மாபொசி சாலையில் சிறிய மழைக்கும் மழை நீர் சாலையில் தேங்குவதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை சுமார் ஒருமணி நேரம் பெயத கனமழைக்கு மார்க்கெட் பகுதி முதல் ரயில் நிலையம் வரை வெள்ளம் முழங்கால் அளவு தேங்கியது. சாலைக்கு இருபுறமும் உள்ள கடைகளில் வெள்ளம் புகுந்ததால், வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்தனர். இருசக்கர வாகனங்களில் அவ் வழியாக சென்றவர்கள் மழைநீரில் சிக்கி தத்தளித்தனர். கார்கள், பஸ்கள் சென்று வரவும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் வெளியேறும் பகுதியில் ரயில் தண்டவாளம் இருப்பதால், மழை நீர் வடிகால்வாய் ரயில்வே நிர்வாகம் முழுமையாக அடைத்து விட்டதால், மழைநீர் வெளியேற வழியின்றி பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதால், ரயில் பயணிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க ரயில்வே நிர்வாகத்துடன் நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post திருத்தணியில் கனமழை ரயில் நிலையம் அருகே தேங்கிய மழைநீர் தத்தளித்த பயணிகள் appeared first on Dinakaran.