×

தவணை கட்ட தாய் பணம் தராததால் சொந்த பைக்கை கொளுத்திய வாலிபர் கைது

ஆவடி: தவணை கட்ட தாய் பணம் தராததால் தனது சொந்த பைக்கையே பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  ஆவடி பருத்திப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாசிலா(65) ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் முகேஷ்(33) எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவர் பைக் கேட்டு அடம் பிடிக்கவே இவரது தாய் வங்கியில் கடன் பெற்று இவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

முகேஷ் வேலைக்குப் போகாததால் பைக்கிற்கான தவணை பணத்தையும் அவரது தாயாரே செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் மாத தவணை செலுத்த பணம் கேட்டுள்ளார். இவரது தாயும் தன்னிடம் பணம் இல்லை. நீ வேலைக்கப் போய் கட்டிக்கொள் என்று கூறியுள்ளார். இதனால் முகேஷ் தாயிடம் சண்டை போட்டுவிட்டு மது அருந்தியுள்ளார். பிறகு பூந்தமல்லி நெடுஞ்சாலை வாகனத்தை நிறுத்தி, வாகனத்தில் இருந்த பெட்ரோலையே எடுத்து வண்டியின் மீது ஊற்றி கொளுத்தி விட்டு, ஆவடி தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்நிலையில், பைக்கை முகேஷ் எரித்ததாக, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீசார் முகேஷிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒத்துக்கொண்டார். இதனால், ஆவடி போலீசார் முகேஷை கைது செய்து, எதற்காக வண்டியை கொளுத்தினார்? விபத்து என்று சொல்லி தவணை கட்டாமலும், இன்ஸ்யூரன்ஸ் பெற்று புது வண்டியை வாங்குவதற்கா? இல்லை ஆத்திரத்தில் செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தவணை கட்ட தாய் பணம் தராததால் சொந்த பைக்கை கொளுத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Masila ,Pilliyar Kovil Street ,Dinakaran ,
× RELATED ஆவடி அருகே கழுத்தை நெரித்து ராணுவ...