×

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் பலியாயினர். 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள சீல்டா நோக்கி கஞ்சன்ஜங்கா பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. காலை 9 மணி அளவில் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ரங்கபானி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.

அப்போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறம் மோதியது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 2 பார்சல் பெட்டிகளும், பொது பெட்டியும் தடம்புரண்டது. மோதிய சரக்கு ரயிலின் இன்ஜின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி ஒன்று விழுந்தது. இந்த விபத்தால் ரயிலில் இருந்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். உடனடியாக போலீசாரும், பயணிகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், ரயில்வே போலீசார், டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்புப்படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 15 பயணிகள் பலியானதாக ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில், சரக்கு ரயிலின் லோகோ பைலட் மற்றும் துணை பைலட்டும், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டும் பலியாகி உள்ளனர். விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதற்கட்ட தகவலின்படி, சரக்கு ரயிலின் லோகோ பைலட் சிக்னலை மீறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணைக்குப் பிறகே உண்மையான காரணம் உறுதிபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி முர்மு தனது இரங்கல் பதிவில், ‘‘மேற்குவங்க ரயில் விபத்து தகவல் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என கூறி உள்ளார். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ‘‘ரயில் விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’’ என கூறி உள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில், ‘‘சோகமான ரயில் விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்காக தேவையான குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த விபத்தை தொடர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொலைதூர ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து பிற்பகல் 12.40 மணி அளவில் விபத்தில் சிக்கிய கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சிய பெட்டிகள் மூலம் பயணிகள் பயணத்தை தொடர்ந்து. அந்த ரயில் இரவு 8 மணி அளவில் சீல்டாவை சென்றடைந்தது. இந்த ரயில் விபத்து சம்பவம், ஓராண்டிற்கு முன்பு ஒடிசாவில் பகானகா பஜார் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடும் விபத்துக்குள்ளாகி 300 பேர் பலியான பயங்கர விபத்து சம்பவத்தை நினைவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ரூ.10 லட்சம் இழப்பீடு
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2.5 லட்சமும், சாதாரண காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

* மோடி அரசை பொறுப்பேற்க செய்வோம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே விபத்துக்கள் அதிகரித்து வருவதற்கு தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியமே காரணம். இன்றைய விபத்து இந்த யதார்த்தத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த அப்பட்டமான அலட்சியத்தை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். இந்த விபத்துகளுக்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம்’’ என்றார். இதே போல கடந்த 10 ஆண்டில் பல்வேறு ரயில் விபத்துகள் நடந்திருப்பதாக பாஜ கூட்டணி அரசை மம்தா பானர்ஜியும் கண்டித்துள்ளார்.

தவறான நிர்வாகமே விபத்துக்கு காரணம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘கஞ்சன்ஜங்கா ரயில் விபத்தின் காட்சிகள் வேதனையளிக்கின்றன. இந்த துயரமான நேரத்தில், பலியான ஒவ்வொருவருக்கும் எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகவும் முழுமையாகவும் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையில் முற்றிலும் தவறான நிர்வாகத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. மோடி அரசாங்கம் ரயில்வே அமைச்சகத்தை கேமரா மூலம் சுயவிளம்பரத்திற்கான தளமாக எப்படி மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது பொறுப்பான எதிர்க்கட்சியான எங்களது கடமை. இன்றைய சோகம் இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டல். இனியும் தவறு செய்யாதீர்கள். நாங்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம். ரயில்வேயை கைவிட்டதற்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்’’ என்றார்.

* கவாச் பாதுகாப்பு அமைப்பு இல்லை
ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க கவாச் தொழில்நுட்பத்தை ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ரயில்வேவாரியத் தலைவர் ஜெய வர்மா சின்கா கூறுகையில், ‘‘இந்த வழித்தடத்தில் கவாச் அமைப்பை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு அது அமைக்கப்படவில்லை’’ என்றார். தற்போது வரை நாடு முழுவதும் 1,500 கி.மீ ரயில் பாதைகளில் கவாச் அமைப்பு செயல்பாட்டில் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3,000 கிமீ நீட்டிக்கப்படும் என்றும் ரயில்வே ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* சிக்னல் கோளாறே விபத்திற்கு காரணம்
விபத்தில் பலியான சரக்கு ரயில் லோகோ பைலட் சிக்னலை மீறியதால் விபத்து ஏற்பட்டதாக ரயில்வே வாரிய தலைவர் ஜெயவர்மா சின்ஹா கூறியிருந்த நிலையில் அதிகாலை 5.50 மணியில் இருந்தே அப்பகுதியில் தானியங்கி சிக்னல் இயங்கவில்லை என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: விபத்து நடந்த பகுதியில் அதிகாலை 5.50 மணியில் இருந்தே தானியங்கி சிக்னல் செயல்படவில்லை. இதனால், சிவப்பு சிக்னலை கடப்பதற்கு டிஏ 912 எனப்படும் எழுத்துப்பூர்வ அதிகாரத்தை ராணிபத்ரா ஸ்டேஷன் மாஸ்டர் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழங்கியிருந்தார். இந்த மாதிரியான சமயங்களில் கோளாறு உள்ள சிக்னலில் ஒரு நிமிடம் ரயிலை நிறுத்திவிட்டு, பின்னர் 10 கிமீ வேகத்தில் ஓட்டிச் செல்ல வேண்டும். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.27 மணிக்கு ரங்கபானி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ராணிபத்ரா ரயில் நிலையம் மற்றும் சத்தர்ஹாட் பகுதி இடையே சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் ரங்கபானியில் இருந்து காலை 8.42 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரயில், எக்ஸ்பிரஸின் பின்புறத்தில் மோதி உள்ளது. இதில், சரக்கு ரயில் ஓட்டுநருக்கும் கோளாறான சிக்னலை கடக்க டிஏ 912 வழங்கப்பட்டுள்ளதா அல்லது சரக்கு ரயில் ஓட்டுநர் விதிமுறைகளை மீறி வேகமாகவோ அல்லது நிற்காமலோ ரயிலை இயக்கினாரா என்பது விசாரணையில் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். இவ்வாறு கூறி உள்ளனர். இதற்கிடையே, சரக்கு ரயில் ஓட்டுநருக்கும் சிவப்பு சிக்னலை கடக்க டிஏ 912 அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலமாக உறுதியாகி உள்ளது. எனவே ரயில் ஓட்டுநர் மீது தவறில்லை, சிக்னல் கோளாறு தான் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே சமயம், விசாரணை நிலுவையில் இருக்கும் போது ரயில்வே வாரியம் ஒட்டுமொத்த பழியையும் சரக்கு ரயில் லோகோ பைலட் மீது போடுவது ஆட்சேபனைக்குரியது என இந்திய ரயில்வே லோகோ ரன்னிங்மேன் அமைப்பின் செயல்தலைவர் சஞ்சய் பந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,Darjeeling district ,Tripura ,Agartala ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...