×

தொள்ளாழி ஊராட்சியில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி ஊராட்சியில் சிதிலமடைந்த நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், கிராம நிர்வாக அலுவலகம், இ-சேவை மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

மேலும், இங்குள்ள மக்களுக்காக 30 ஆயிரம் லிட்டர் மற்றும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் நாள்தோறும் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆரம்பப் பள்ளியின் அருகாமையில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் 4 தூண்களும் விரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே சிதலமடைந்து காணப்படுகின்றன.

மேலும், தொட்டியின் கீழ் பகுதியிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எந்த நேரத்திலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து நீர் கசியும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொள்ளாழி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், கிராமத்திற்கு வரும் அரசு அதிகாரிகளிடமும் பலமுறை தெரிவித்தும் இதுவரை புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மாவட்ட நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டுவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டால், ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்காமல் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அல்லது 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 3 தெருக்களுக்கு 1 என பிரித்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிலையில், பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்காமல் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தொள்ளாழி ஊராட்சியில் 2 பகுதிகளில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின்பு பழைய 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post தொள்ளாழி ஊராட்சியில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி appeared first on Dinakaran.

Tags : Tollaj Panchayat ,Wallajahabad ,Walajabad Union ,Union Primary School ,Anganwadi Center ,
× RELATED நாயக்கன்பேட்டை ஊராட்சியில்...