×

ஆறுமுகன் வீடும் அருணகிரி ஏடும்!

திருப்பம் தரும் திருப்புகழ்!

ஆறுமுகப் பெருமானின் சரணார விந்தங்களிலே சப்திக்கின்ற சலங்கை, தண்டை, கிண்கிணி, வீரக்கழல், சிலம்பு இவ் அனைத்தையும் விட அதி அற்புதமான தாள விசேஷங்களைத் தருகிறது அருணகிரியாரின் தமிழ்! ‘சந்தம் அருணை முனிவர்க்கே சொந்தம்!’ என்று சாற்றுகின்ற திருப்புகழால் மண்ணுலக மக்கள் மட்டும் அல்லாது விண்ணுலக தேவர்களும் வியப்பாலும் மகிழ்வாலும் விழிகளை இமைக்காது விளங்குகின்றனராம்.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து இதற்கு கீழ்க் கண்டவாறு கட்டியம் கூறுகிறது!

‘‘அருணகிரி நாவில் பழக்கம்! – தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம்! – பல
அடியார் கணம் மொழி போதினில்
அமராவதி இமையோர் செவி
அடைக்கும் -அண்டம்- உடைக்கும்!’’
‘‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!’’
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!
என்று ஆனந்தக் கூத்தாடுகிறார் அமரகவி பாரதியார்!

இறைவன் தந்த கோடி இன்பங்களிலே எது தலையாய இன்பம் என்று அறிந்து கொள்ள ஆவலா?
அதற்கும் இன்னொரு பாட்டிலே அவரே பதில் அளிக்கிறார்!

‘ஆசை தரும் கோடி
அதிசயங்கள் கண்ட
துண்டு! அதிலே
ஓசை தரும் இன்பம்
உவமையிலா இன்பம்!

பூதங்கள் ஓத புதுமை தரல் விந்தை
யெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு
நேராமோ?’

காட்டு நெடுவானம் கடல் எல்லாம்
விந்தையெனில்
பாட்டினைப் போல் ஆச்சர்யம் பாரின்
மிசை இல்லையடா!

ஓசை தரும் இன்பம் தான் உலகிலேயே உய்வான இன்பம் என்று பாடுகிற பாரதியார் அருணகிரியாரின் திருப்புகழை வியந்து போற்றுகிறார்.
இம்மியும் கூட இலக்கணம் பிறழாமல் எப்படி இப்படி தெய்வீகக் கூத்தாட முடிகிறது அருணகிரியால் என்று அதிசயித்து திருப்புகழின் ஓசைக் கட்டிலேயே திருமுருகனைப் போற்றுகிறார்.
முருகா! முருகா! முருகா!

வருவாய் மயில் மீதினிலே
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
அருணகிரியார் வாழ்ந்த காலம் பதினான்காம் நூற்றாண்டு. அதற்குப் பின்பு தோன்றிய அனைத்து அருளாளர்களும், அறிஞர்களும் திருப்புகழை உச்சிமேல் வைத்து
மெச்சியிருக்கிறார்கள்.

ஆறுமுகம் தோன்றும் அழகிய வேல்
தோன்றும் அவன்
ஏறுமயில் தோன்றும் எழில் தோன்றும்- சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன திருப்புகழை
பாரில் வழுத்தினோர் பால்.

அண்ணாமலைத் தலத்தில் பேசா அனுபூதி நிலையில் இருந்த அருணகிரியார் வயலூர் தலத்தில் வாய் திறந்தார். வண்ணத் தமிழ் பொழிந்தார்.
மன்னா! குறத்தியின் மன்னா!
வயற்பதி மன்னா!
மூவர்க்கொரு தம்பிரானே!
என்ற நெடுங்சாண் கிடையாக வயலூர் முருகன் பாதபங்கயங்களில் விழுந்து எழுந்தார்.

‘‘அருணதள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ்தான் அளித்த மயில் வீரன்’’ வயலூர் வடிவேலனே என்ற காரணத்தால் நன்றிப்பெருக்குடன் வெவ்வேறு தலங்களில் பாடிய திருப்புகழ்ப் பாடல்களிலும் வயலூரா! வயலூரா! என்றே அழைத்து முத்திரை பதிக்கிறார்.

‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று பலரால்
அறியப்பட்ட அர்ச்சனைத் திருப்புகழிலும்.
‘‘ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரா!’’
என்று ஏற்றிப் போற்றுகிறார்.

எழுபத்து நான்கு சீர்கொண்ட மிகப் பெரிய திருப்புகழை வயலூர் தலத்திற்கு வடித்திருக்கும் அருணகிரியார் ஐம்பத்து ஐந்து இடங்களில் வேறு தலப் பாடல்களின் இடையே வயலூர் முருகனை வர்ணிக்கிறார்.

‘என் செயல் ஆவது யாதொன்றுமில்லை’
‘எல்லாம் அவன் செயலே’
‘அவனின்றி ஓரணுவும் அசையாது’
என்பது ஆன்றோர்களின் வாக்கு.

அதே சமயம் அணுகூட ஆயிரம் காரியங்கள் புரியும் அவனருள் பெற்றுவிட்டால்! வள்ளலார் பாடுகிறார்!படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல்! ஆண்டவனுக்கே உரிய அரும்பெரும் செயல்களை இவ் ஐந்தையும் ‘அருள் பெறில் துரும்பும் ஐந்தொழில் புரியும்’ என வியந்து போற்றுகிறார். தமிழ்க் கடவுள் முருகனால் தடுத்தாட் கொள்ளப் பெற்ற அருணகிரியார் வண்டமிழ் விநோதமான திருப்புகழை வயலூர் சந்நிதியில் பாடத் தொடங்குகிறார். ‘ஆட்டு வித்தால் அடியேன் ஆடுகிறேன்! அவ்வளவுதான்!

என்னால் நடைபெறுவது என்ன?
‘‘என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னால் இருக்கவும் பெண்டீர் வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் தொந்த நோயை
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்கு நானார்?

கன்னார் உரித்த என் மன்னா! எனக்கு நல்
கர்ணாமிர்தப் பதம் தந்த கோவே!
கல்லார் மனத்துடன் நில்லா மனத்துவ
கண்ணாடியில் தடம் கண்ட வேலா!
மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
வன்வாளியிற் கொளும் தங்க ரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு தம்பிரானே!’’

பொம்மலாட்டத்தில் பங்கு பெறும் பொம்மைகள் ஆடுகின்றன! ஓடுகின்றன! அசையாமல் அப்படியே நிற்கின்றன! பொம்மைகளின் அசைவுகள் அனைத்தும் பொறுப்பாக கயிறு கட்டி போகவும், படுக்கவும், ஓடவும் வைக்கும் பொம்மலாட்டக்காரனின் பொறுப்பில் தானே இருக்கிறது! இஷ்டப்படி பொம்மைகள் தானே இயங்கமுடியுமா?
‘‘பொம்மை நாம்! உண்மை அவன்! புரிந்து கொள்வோம்!’’ பட்டினத்தார் தம்முடைய ஞானப்பாடல் ஒன்றில் நவில்கின்றார்.

‘‘நன்னாரிற்கட்டிய சூத்திரப் பாவை நன்னார் தம்பினால்
தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ? அதுபோல்
உன்னால் யானும் திரிவதல்லால் மற்று உனைப்பிரிந்தால்
என்னால் இங்கு ஆவதுண்டோ? இறைவா! கச்சி ஏகம்பனே!

வயலூர் திருப்புகழின் எதிரொலியாகவே பட்டினத்தாரின் பாடலும் ஒலிக்கின்றது.‘நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக’ என்று கந்தர் அனுபூதியின் முதற் செய்யுளிலே மொழிந்தது போல இவ்வயலூர் திருப்புகழிலும் கல்லில் நார் உரிப்பதுபோல் அடியேனின் பாறாங்கல் நெஞ்சத்தையும் பளிங்கு நீரோடையாக ஆக்கிய பன்னிருகண் வேலவரே! மேலான பிரணவ உபதேசத்தால் என் செவிகளில் அமுதம் செலுத்தியவரே! கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியே! தடக்கையில் தாங்கிய வேலாயுதத்தால் வயலூரில் தடாகத்தை உண்டாக்கிய தயாபரரே! அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்தியர்க்கும் மேலானவரே! என்று ஆறுமுகனை ஆராதிக்கிறார்.

ஆன்மாக்கள் தம் சொந்த விருப்பத்தின்படி இப்பூவுலகில் பிறக்க முடியாது.

நமது விருப்பப்படியா தந்தை, தாய்,
உறவினர்களைத் தேர்வு செய்கிறோம்?
அப்படி என்றால் அனைவருமே செல்வந்தக்
குடியைத் தேர்வு செய்திருப்போமே!
ஒரு குழந்தை பிறந்தவுடனேயே கஞ்சிக்கு ஏங்குகிறது!

இன்னொரு குழந்தை தங்கக் கிண்ணத்தில்
பால் பருகுகின்றது!
கோடீஸ்வரர் மாளிகையில் கட்டில்
இருக்கிறது ஆனால் தொட்டில் இல்லை.
படுத்துறங்க பாய் இல்லாத ஏழை வீட்டில் பல குழந்தைகள்!

‘இல்லை ஒரு பிள்ளை என
ஏங்கு வோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
செல்வ மகனே!’

என்று பெற்றோர்களே மனம் பேதலிக்கிறார்கள். பிறப்பும், இறப்பும், இடைப்பட்ட காலங்களில் வாழ்க்கை நடப்பும் எதுவுமே மனிதர்களாகிய நம் கையில் இல்லை. எனவே பரமனைப் பரிபூர்ண சரணாகதி அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது இவ்வயலூர் திருப்புகழ்!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post ஆறுமுகன் வீடும் அருணகிரி ஏடும்! appeared first on Dinakaran.

Tags : Arumugan ,Arunagiri ,Arunagiriyar ,Lord ,Arumuga ,Aruna ,Tirupukazhal ,
× RELATED சேலம் ஜி.ஹெச்சில் பணியில் இருந்த...