×

விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி நிர்பந்தித்த காதலன் கொலை: தப்பி ஓடிய காதலி கைது

விருதுநகர்: பாலியல் தொழிலில் ஈடுபடும்படி வற்புறுத்தியதால், விருதுநகர் லாட்ஜில் காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விருதுநகர், காந்தி நகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (27). திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நந்தினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் 4 நாட்களுக்கு முன் விருதுநகர் வந்து ராமமூர்த்தி ரோட்டிலுள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

இதற்கிடையே வீட்டிற்கு சென்று நந்தினியுடனான பழக்கம் குறித்தும், தாங்கள் லாட்ஜில் தங்கியிருப்பது குறித்தும் தாய் செல்வராணியிடம் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு காசி விஸ்வநாதன் மர்மமான முறையில் லாட்ஜில் இறந்து கிடந்தார். நந்தினி அங்கு இல்லை. இதையடுத்து தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக விருதுநகர் கிழக்கு போலீசில் செல்வராணி புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் நேற்று முன்தினம் திருப்பூர் சென்று நந்தினியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நந்தினிக்கு அவரது தாய்மாமனுடன் முதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவருக்கு இருந்த குடிப்பழக்கம் மற்றும் தவறான நடத்தை காரணமாக நந்தினி விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்த நந்தினிக்கும், காசி விஸ்வநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.

4 நாட்களுக்கு முன் விருதுநகர் வந்த காசி விஸ்வநாதன் லாட்ஜில் ரூம் போட்டு நந்தினியுடன் தங்கியுள்ளார். இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது நந்தினியை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என காசி விஸ்வநாதன் நிர்பந்தம் செய்துள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அப்போது குறைவான போதையில் இருந்த நந்தினி, தன்னிடம் இருந்த ரப்பர் பேண்ட் மற்றும் கைகளால் காசி விஸ்வநாதன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு திருப்பூர் தப்பி சென்றுள்ளார்’’ என்றனர்.

* ஒரே பெண்ணுடன் இருவர் காதல் மாஜி காதலன் குத்திக்கொலை
ஈரோடு மாவட்டம் பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் துரைசாமி மகன் சேது மணிகண்டன் (23). 12ம் வகுப்பு படித்துள்ள இவர், வெல்டிங் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். பவானி, செங்காடு கோட்டை நகரை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் மகன் குகநாதன் (26). குமாரபாளையத்தில் தள்ளுவண்டியில் பீசா, பர்கர் கடை வைத்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், பவானி காமராஜர் நகரை சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேது மணிகண்டன் காதலித்துள்ளார்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து அதே பெண்ணை குகநாதன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு கடந்த 14ம் தேதி பிறந்தநாள் என்பதால், அவர் கேக் வெட்டி கொண்டாடிய படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் ஆக குகநாதன் வைத்திருந்தார். இதைப்பார்த்த சேது மணிகண்டன், பவானி அரசு மருத்துவமனை அருகே வருமாறு குகநாதனை செல்போனில் அழைத்தார்.

சம்பவ இடத்துக்கு நள்ளிரவு 12.30 மணி அளவில் இருவரும் வந்தனர். அப்போது இருவரும் அப்பெண்ணின் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். இதில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த குகநாதன், மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சேது மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிந்து குகநாதனை கைது செய்தனர்.

The post விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி நிர்பந்தித்த காதலன் கொலை: தப்பி ஓடிய காதலி கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Kashi Viswanathan ,Gandhi Nagar, Virudhunagar ,Tirupur ,Virudhunagar Lodge ,
× RELATED விருதுநகர் அருகே மாதச்சீட்டு நடத்தி...