×

1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற சீல்டு கால்வாய் சிமெண்ட் கால்வாயாகுமா?.. சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, ஜூன் 16: சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன சீல்டு கால்வாயில், சிமெண்ட் கால்வாய் (கான்கிரீட்) அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளது. பெரியாறு கால்வாயில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 1925ம் ஆண்டு சீல்டு மண் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மதுரை மாவட்டம் குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்கி, சிவகங்கை மாவட்டம் சாலூர் பூக்குழி கண்மாயில் முடிவடைகிறது.

எட்டு கி.மீ நீளமும், 30அடி அகலமும் கொண்ட இக்கால்வாயில் கடந்த 2000ம் ஆண்டில் ரூ.48 லட்சத்தில் குறிச்சிப்பட்டி கண்மாய் காரமடை முதல் கண்மாய் கழுங்கு வரை சுமார் ஒரு கி.மீ தூரம் கண்மாயின் மேற்பகுதியில் பைபாஸ் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாயால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மழை நீர் திறக்கும் நேரத்தில் அதிகப்படியான நீர் வீணாவதால் சீல்டு மண் கால்வாயை, சிமெண்டால் அமைக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு சீல்டு கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றியமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கால்வாய் அமைப்பதற்கான கணக்கீட்டு பணி நடந்தது. கருத்துரு தயார் செய்து, ரூ.21.96கோடிக்கு திட்ட மதிப்பீடும் பொதுப்பணித்துறை சார்பில் சென்னை வடிவமைப்பு கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 2018ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ரூ.22கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக 110விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மீண்டும் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சீல்டு கால்வாய் ரூ.22 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணியை விரைந்து தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற சீல்டு கால்வாய் சிமெண்ட் கால்வாயாகுமா?.. சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Sivagangai ,Periyar ,Tirupattur ,Tiruppuvanam taluk ,Periyar Direct Irrigation Commission ,Dinakaran ,
× RELATED தாய்க்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய மகன்கள்