×

மானாமதுரை ரயில் நிலையத்தில் குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்த கோரிக்கை

மானாமதுரை, ஜூன் 16: மானாமதுரையில் ஆங்கிலேயர் காலத்தில் 1914ல் ரயில்நிலையம் திறக்கப்பட்டது. திருச்சி, மதுரை, விருதுநகர் மார்க்கமாக மானாமதுரை ரயில் நிலையம் வழியாக தினமும் 26 ரயில்கள் செல்கின்றன. இவற்றில் சென்னைக்கு இரவு 7.10 மணிக்கும், 10.20 மணிக்கும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. இது தவிர வாராந்திர ரயில்களான வாரணாசி, அயோத்தியா, புவனேஸ்வர், ஓகா, திருப்பதி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், எர்ணாகுளம், ஹூப்ளி, பனாரஸ், புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மானாமதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ரயில்களில் செல்வதற்கும் மானாமதுரை ரயில்நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் வசதிக்காக குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுத்தரிகரிக்கப்பட்ட குளிர்ந்தநீர் வழங்கும் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மாதங்களாக உரிய பராமரிப்பில்லாததால், இந்த குடிநீர் குழாய் தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் தண்ணீரில் பாசி படர்ந்து காணப்படுகிறது.இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. பயணிகள் நலன் கருதி, குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ரயில்பயணி சங்கீதா கூறுகையில்., ராமநாதபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் செல்லும் போது மானாமதுரையில் குடிநீர் பிடிக்க சென்றோம். முதலாவது பிளாட்பார்மில் இருந்த 3 குடிநீர் குழாய்களிலும் கசிவுநீர் தேங்கி பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீர் பிடிக்காமல் காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் குடிநீர் குழாய்களை தினமும் சுகாதாரமான முறையில் பராமரித்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post மானாமதுரை ரயில் நிலையத்தில் குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manamadurai railway station ,Manamadurai ,Trichy ,Madurai ,Virudhunagar ,Chennai ,
× RELATED மானாமதுரை ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம்: திறக்க கோரிக்கை