×

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை

* 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம், விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக மோடி வரும் 20ம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் சென்னையில் இருந்தவாறு 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு 9 முறை தேர்தல் பிரசாரத்திற்காக வந்தார்.

ஆனால், தமிழகத்தில் பாஜ கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பிற மாநிலங்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, இந்திய பிரதமராக 3வது முறையாக மோடி பொறுப்பேற்றார். 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி முதன்முறையாக வருகிற 20ம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரமாண்ட விழா நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

அங்கு அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்றுகிறார். விழாவில் 2 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அதாவது, எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையையும், மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்த 2 ரயில் சேவையையும் அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். மேலும் திருநெல்வேலி மாவட்டம் மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரை 102 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,752 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இதில் ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம்-நெல்லை இரட்டை வழி தடத்தையும், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையிலான இரட்டை வழி தடத்தையும் பிரதமர் மோடி அன்றைய தினம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கான புதிய பராமரிப்பு பணி அமைக்கப்பட உள்ளது. இந்த பணிமனைக்கும் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் நெய்வேலியில் 3 திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கியும் வைக்கிறார். விழாவில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதன்முறையாக சென்னை வர உள்ளார். இதனால், பிரதமர் வரும் சாலை மற்றும் அவர் பங்கேற்கும் விழா மேடை வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post 3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Vande Bharat ,CM ,M.K.Stal ,
× RELATED டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில்...