×

மகனை சிபிஐ பிடித்து வைத்துள்ளதாக கூறி தாயை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

திருவொற்றியூர்: மகனை சிபிஐ பிடித்து வைத்துள்ளதாக மிரட்டி, அவரது தாயிடம் ரூ.10 ஆயிரம் ஜிபே வழியாக பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். எண்ணூர் ஜோதி நகரை சேர்ந்தவர்கள் சேகர்- உமா தம்பதி. இவர்களது மகன் பிரவீன்குமார்(22). நந்தனத்தில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பிரவீன் குமார் வேலைக்கு சென்று விட்டார். நேற்று காலை உமாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மர்ம நபர், ‘‘பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டதால், அவரை சிபிஐ அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். அவரை விடுவிக்க ரூ.40 ஆயிரத்தை எனது எண்ணுக்கு ஜிபே மூலம் அனுப்ப வேண்டும். இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது,’’ என்று கூறியுள்ளார்.இதனால் பயந்து போன உமா, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு முதலில் இருக்கும் பணத்தை அனுப்ப வேண்டும் என்றும், பின்னர் முழு பணத்தையும் அனுப்ப வேண்டும். தவறினால் உன் மகனை காப்பாற்ற முடியாது என்று செல்போனில் மிரட்டியுள்ளார்.இதனால் மகனை காப்பாற்ற ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, அதுபோன்ற சம்பவம் எதுவும் இல்லை, யாரோ ஏமாற்றி உள்ளனர் என பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து எண்ணூர் காவல் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் உமாவிடம் பேசிய மர்ம நபரின் மொபைல் எண்ணை ஆய்வு செய்து மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

The post மகனை சிபிஐ பிடித்து வைத்துள்ளதாக கூறி தாயை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : CBI ,Thiruvottiyur ,Sekar-Uma ,Ennoor ,Jyoti ,Nagar ,Praveen Kumar ,Nandanam ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...