×

மக்களவை தேர்தல் பணிகளில் மந்தம்; 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிப்பு?.. தமிழ்நாடு பொறுப்பாளரும் மாற்றப்படுகிறார்


புதுடெல்லி: தேர்தல் பணியில் சுணக்கம் காட்டிய 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு பொறுப்பாளரை மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்விகளை தந்த மாநிலங்களின் தலைவர்கள் மற்றும் சில பொறுப்பாளர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் தலைமை சிறப்பாக பணியாற்றியதால், அந்த மாநில தலைவர்களின் பதவிகளில் தொடர வாய்ப்புள்ளது.

இருப்பினும், பஞ்சாப் அரசியலில் தீவிரமாக ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், அவருக்குப் பதிலாக புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படலாம். இதுதவிர டெல்லி, அரியானா மாநில பொறுப்பாளராக இருக்கும் தீபக் பவ்ரியா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு பொறுப்பாளராக இருக்கும் அஜோய்குமார் ஆகியோர் இரு மாநில பொறுப்புகளை கவனித்து வருவதால், அவர்களிடம் இருந்து தலா ஒரு மாநில பதவி பறிக்கப்படலாம். இதுமட்டுமின்றி தேர்தலின் போது, டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்ததால், டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்திர யாதவ் பதவியேற்றார். இவருக்கு பஞ்சாப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

அதேநேரம் இமாச்சல், பீகார், ஜார்கண்ட், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில தலைவர்களும் மாற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்பார்த்த சீட்கள் கிடைக்கவில்லை. மேற்குவங்கத்தை பொருத்தமட்டில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் தேர்தலில் தோல்வியடைந்தார். அதனால் அவரது பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. தெலங்கானாவில் முதல்வர் மற்றும் மாநில தலைவர் ஆகிய இரு பதவிகளையும் வகிக்கும் ரேவந்த் ரெட்டி, மாநில தலைவர் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் அமைச்சரான ஆலம்கீர் ஆலத்திற்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்படலாம். விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருவதால், மாநில அளவில் தலைவர்கள், பொறுப்பாளர்களை மாற்றுவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. வரும் ஜூலை 3ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, கட்சியின் அமைப்பில் முக்கிய மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post மக்களவை தேர்தல் பணிகளில் மந்தம்; 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிப்பு?.. தமிழ்நாடு பொறுப்பாளரும் மாற்றப்படுகிறார் appeared first on Dinakaran.

Tags : congress ,Tamil Nadu ,NEW DELHI ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் பாஜக மாநில தலைவர்...