×

மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து விமான நிலைய மேலாளர், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர், வெடிகுண்டுகள் கண்டறியும் நிபுணர்கள் குழு ஆகியோருக்கு அவசர தகவல்கள் கொடுத்தார். சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கியது. கூட்டத்தில் விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் குழுவினர், விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல், வழக்கமான புரளியாக தான் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு, சோதனைகள் நடந்து வருகின்றன. மேலும் விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருட்கள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி, சோதனையிடுகின்றனர். இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, இதேபோன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கின்றன. அதேபோல், இதுவும் பெரும் புரளியாக தான் இருக்கும் என்று தெரிகிறது’’ என்றனர்.

The post மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Chennai Domestic Airport ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்