×

மாங்காடு அருகே பரபரப்பு பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பிள்ளைகளை அழைத்து செல்ல குவிந்த பெற்றோர்

குன்றத்தூர், ஜூன் 15: மாங்காடு அருகே பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரபல பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், நேற்று வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது பள்ளியின் அலுவலகத்திற்கு ஈ-மெயில் ஒன்று வந்தது. அதனை திறந்து பார்த்த பள்ளி நிர்வாகத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடித்துச் சிதறிவிடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், செய்வதறியாது தவித்த பள்ளி நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்திற்கு வந்தனர். அதற்குள் மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, பள்ளியின் மைதானத்தில் நிற்க வைக்கப்பட்டனர்.

பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் நவீன கருவிகள் மூலம் தீவிரமாக சோதனை செய்தனர். இதனிடையே, பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால், பதறியடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர், மிகுந்த பதற்றத்துடன் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் நீண்ட நேரம் சோதனை செய்து பார்த்த பிறகும், வெடிகுண்டுகள் ஏதும் சிக்காததால், அது வெறும் புரளி என்று தெரியவந்தது. அதன் பிறகே மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த, சில மாதங்களாக சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபரால் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் பள்ளியிலிருந்து மாணவர்களை பெற்றோர் அழைத்துச் சென்றதால் அப்பகுதியெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பதற்றமான சூழ்நிலை நிலவியது. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குற்றவாளிகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

The post மாங்காடு அருகே பரபரப்பு பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பிள்ளைகளை அழைத்து செல்ல குவிந்த பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kunradhur ,Kerugambakkam ,
× RELATED பூந்தமல்லி அருகே பரபரப்பு பிரபல...