×

லாரி டிரைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை * மற்றொரு விபத்தில் வேன் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை * திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு பைக் மீது லாரி மோதி இரண்டு பேர் பலியான சம்பவம்

திருவண்ணாமலை. ஜூன் 15: திருவண்ணாமலையில் பைக் மீது லாரி மோதி இரண்டு பேர் பலியான சம்பவத்தில், லாரி டிரைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்(50) மற்றும் தமிழரசன் (34). இருவரும், கடந்த 2012ம் ஆண்டு மே 9ம் தேதி திருவண்ணாமலை காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணன் மற்றும் தமிழரசன் ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர்.

இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், லாரி டிரைவர் கமலபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் மணி(56) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த விபத்து வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயசூர்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், பைக் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவர் மணிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோல், தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் அண்ணாமலை என்பவர் ராதாபுரம் மெயின் ரோட்டில் கடந்த 2015ம் ஆண்டு மே 25ம் தேதி நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த மினி வேன் மோதிய விபத்தில் பலியானார். இது தொடர்பாக, வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேன் டிரைவர் ஆயுஷ் பாஷாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பும் நேற்று வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயசூர்யா, மினி வேன் டிரைவர் காட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சுல்தான்பாஷா மகன் ஆயுப்பாஷாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹6500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post லாரி டிரைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை * மற்றொரு விபத்தில் வேன் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை * திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு பைக் மீது லாரி மோதி இரண்டு பேர் பலியான சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,Ramakrishnan ,Tamilarasan ,Bennathur village ,Sengam, Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED புதிய கழிப்பறைகள் அமைக்கும் பணி...