×

திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி

ஈரோடு: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. இன்னும் 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த 11ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்த கருத்து முரணாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது குறித்து, நான் உட்பட பலரும் கருத்து தெரிவித்துவிட்டோம். செல்வப் பெருந்தகையும் விளக்கமளித்து விட்டார். அது முடிந்துவிட்டது. கூட்டணிக்குள் சில கருத்து வேறுபாடுகள், பிரச்னைகள் இருப்பது சகஜம்தான். எனவே, உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. இன்னும் 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும். எதிர்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழிசையிடம் அமித்ஷா நடந்து கொண்ட விதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 25 சதவீதம் முஸ்லிம் மக்களை கொண்ட நாட்டில் அவர்களில் ஒருவருக்கு கூட அதிகார மையத்தில் இடமில்லாமல் ஆட்சி செய்வதை எல்லோருக்கும் பொதுவான அரசு என கூற முடியாது.

ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவராக வர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். நீட் தேர்வு குளறுபடிகள், மோசடிகளை கருத்தில் கொண்டு அதை நீக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி சீமான் சென்னையில் இருந்துகொண்டு அரசியல் செய்வதைவிட பாம்பே, கொல்கத்தா, டெல்லி என சென்று வந்து அரசியல் செய்தால் நாட்டுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கு தமிழ் நாட்டுக்கு தேவை. எனவே, தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க திருமாவளவன் எங்களுடன்தான் இருப்பார். இவ்வாறு கூறினார்.

The post திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK-Cong ,BJP government ,EVKS ,Elangovan ,Erode ,DMK ,Congress ,EVKS Ilangovan ,Former ,President ,Tamil Nadu Congress Committee ,Erode East Constituency ,MLA ,EVKS.Elangovan ,Dinakaran ,
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...