×

3 முறை எம்எல்ஏ அகில இந்திய, மாநில பொறுப்புகள் என செல்வாக்குடன் வலம் வந்த விஜயதரணியை கைவிட்ட பாஜ


சென்னை: காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளாராகவும், பார்த்த உடனே அடையாளம் காணும் நிர்வாகியாகவும் வலம் வந்தவர் விஜயதரணி. அவருக்கு கடந்த 2011ம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் சீட் கிடைத்த போது, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி என்ற அடையாளத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டார். 1987ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் பயின்ற போதே மாணவர் காங்கிரசில் இணைந்தவர் விஜயதரணி. ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த பெண் வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் ஜூனியராக சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிராக்டிஸ் செய்து வந்தார். ப.சிதம்பரம் சிபாரிசில் 2011ம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் சீட் வாங்கி காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார்.

இவரது கணவர் சிவக்குமார் கென்னடி குமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனால் விஜயதரணி என்ற தனது பெயரோடு விஜயதரணி கென்னடி என 2011 தேர்தலின் போது சுவர் விளம்பரங்கள் கொடுத்தார். கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள தொகுதியான விளவங்கோட்டில் இவரது வெற்றி எளிதானது. 2016 சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு சீட் கொடுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சொந்த ஊர்க்காரர்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்க, வெளியில் இருந்து வந்தவருக்கு மீண்டும் சீட் வழங்குவதா என விளவங்கோட்டை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டனர்.

ஆனாலும், தனது டெல்லி லாபி மூலம் 2வது முறையாக விளவங்கோடு தொகுதியில் சீட் வாங்கி வெற்றி பெற்றார். இதனிடையே 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் சீட் எதிர்பார்த்து கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வசந்தகுமாருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இதையடுத்து வசந்தகுமார் மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில் எம்பி சீட் வாங்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதும் அந்த முயற்சியில் தோல்வி மட்டுமே மிஞ்சியது. விஜய் வசந்துக்கு காங்கிரஸ் மேலிடம் எம்பி சீட் கொடுத்தது.

இதையடுத்து வேண்டா வெறுப்பாக விளவங்கோடு தொகுதியில் 3வது முறையாக எம்எல்ஏ சீட் வாங்கினார். ஆனால் விஜயதரணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என சத்தியமூர்த்தி பவனில் தர்ணா போராட்டங்கள் எல்லாம் நடந்தது. கே.எஸ்.அழகிரி தான் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என 3வது முறை எம்எல்ஏ சீட் கொடுத்தார். அதில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். அது தனிக்கதை. இதை தொடர்ந்து, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் செல்வப்பெருந்தகை அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியையும் அவர் குறி வைத்து காய்களை நகர்த்தி வந்தார். ஆனால் அந்த பதவியும் செல்வப்பெருந்தகைக்கு ஒதுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான கோபத்தில் இருந்த விஜயதரணி குறித்து அறிந்து கொண்டனர் பாஜ தலைவர்கள். இதை அடுத்து அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைய வைத்துள்ளனர். இதற்காக பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதரணி, இனியும் காங்கிரசில் இருப்பதா என்ற ஆதங்கத்தில் பாஜவில் தன்னை ஐக்கியமாக்கி கொண்டார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து அதிரடி காட்டினார்.

ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜயதரணி இருந்தார். ஆனால் பாஜ தலைமையோ அதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லையாம். அடுத்ததாக நாடாளுமன்ற தேர்தல் வந்தது, இந்த தேர்தலில் தனதுக்கு பாஜ சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அந்த சீட்டு வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற எம்பி சீட்டு கிடைக்கும் என காத்திருந்த விஜயதரணிக்கு அதிர்ச்சியே கிடைத்தது. அதை தொடர்ந்து, விளவங்கோடு சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ சீட் விஜயதரணிக்கு பாஜ தலைமை வழங்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனாலும் அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்ததாக, பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்துள்ளது. இதில் தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தருவார்கள் என்று காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுபற்றிய பேச்சையே பாஜ தலைமை எடுக்கவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த போது தொடர்ந்து 3 முறை எம்எல்ஏ, அகில இந்திய பொறுப்புகள், மாநில பொறுப்புகள் என செல்வாக்காக வலம் வந்த விஜயதரணி, தற்போது பாஜவில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் கண்டு கொள்ளாதவராக ஆக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் புலம்புவது கன்னியாகுமரி காங்கிரசார் காதில் எதிரொலிப்பதாக உள்ளதாம். பாஜவின் முக்கிய நிர்வாகிகள் அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ஏதேதோ பதவிகள் தன்னை அலங்கரிக்கும் என்ற கனவில் வலம் வந்த விஜயதரணியை தற்போது பாஜ தலைமை கண்டுகொள்ளாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜவை நம்பி உள்ளதும் போச்சே என்று விஜயதரணி பாஜ மீது கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

The post 3 முறை எம்எல்ஏ அகில இந்திய, மாநில பொறுப்புகள் என செல்வாக்குடன் வலம் வந்த விஜயதரணியை கைவிட்ட பாஜ appeared first on Dinakaran.

Tags : BJP ,Vijayatharani ,MLA ,India ,CHENNAI ,Congress ,Vilavankode ,Kavimani National Vinayakam Pillai ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...