×

மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கு; நடிகர் பிருத்விராஜிக்கு கைது வாரன்ட்: குடும்ப நல கோர்ட் உத்தரவு

திருமலை: மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை என்ற வழக்கில் நடிகர் பிருத்விராஜிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து விஜயவாடா குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடத்தை சேர்ந்தவர் பாலிரெட்டி பிருத்விராஜ், தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர். மேலும் இவர் தமிழில் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடத்துள்ளார். இவர் கடந்த 1984ம் ஆண்டு லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளுக்கு பின்னர் பிருத்விராஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் லட்சுமி தனது குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டில் வசிக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு விஜயவாடாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு லட்சுமி வழக்கு தொடர்ந்தார். அதில், பிருத்விராஜ் மாதம் ₹30 லட்சம் சம்பாதிக்கிறார். எனவே எனக்கு மாதம் ₹8 லட்சம் பராமரிப்புத் தொகையாக தருமாறும், வழக்கு செலவுகளுக்கான தொகையை பெற்று தரும்படியும் கோரினார். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு கடந்த 2022ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில் கோர்ட் செலவுக்கு சேர்த்து ₹8 லட்சத்தை மாதந்தோறும் 10ம் தேதிக்குள் செலுத்த பிருத்விராஜூக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் கோர்ட் உத்தரவுப்படி பிருத்விராஜ் ஜீவனாம்சம் வழங்கவில்லை என்று கூறி லட்சுமி சார்பில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது கோர்ட் உத்தரவை பின்பற்றாததால் பிருத்விராஜுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து கோர்ட் நேற்று உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
எனது குடும்ப விவகாரத்தில் என்னுடைய மனைவிக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்ச தொகையை நீதிமன்ற உத்தரவுப்படி தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனை வேண்டுமென்றே சில யூடியூப் சமூக வலைத்தள பக்கத்தில் என்மீது அவதூறு பரப்பும் விதமாக சர்ச்சையை கிளப்பி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் மீது எனது வழக்கறிஞர் மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கு; நடிகர் பிருத்விராஜிக்கு கைது வாரன்ட்: குடும்ப நல கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Prithviraj ,Family Welfare Court ,Tirumala ,Vijayawada Family Welfare Court ,Balireddy Prithviraj ,Tadepallikoot, West Godavari district ,Andhra State ,
× RELATED பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு