×

ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி

 

ஊட்டி, ஜூன் 14: தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.  நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் தேசிய தன்னார்வ ரத்த கொடையாளர் தினம் அனுசரிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக 20 வருடங்களாக இத்தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ரத்த கொடையாளர்களுக்கு நன்றி என்ற கருப்பொருளில் ஊட்டி நகரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேரிங்கிராஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடத்தப்பட்டது.

ரத்தம் தேவைப்படுவோரின் உயிரை காப்பாற்ற ரத்த தானம் செய்வது அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், ஊக்குவிக்கவும் நடத்தப்பட்டது. ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி சார்பில் மாதம் தோறும் 3 முதல் 4 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. யாருக்கு எந்த தேவையான ரத்த வகைகள் தேவையோ அவை ஏற்பாடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்றார். இப்பேரணி மருத்துவ கல்லூரியில் நிறைவடைந்தது. மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Blood Donor Day ,National Voluntary Blood Donor Day ,Nilgiri District Government Medical College Hospital ,Tamil Nadu State AIDS Control Society ,Government Medical ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி