×

கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க ₹350 கோடியில் வெள்ள தடுப்பு பணி: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரம்

சென்னை, ஜூன் 14: கடற்கரை நகரமான சென்னை புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரமானவையாகவும், சில பகுதிகள் கடல் மட்டத்தைவிடத் தாழ்வானவையாகவும் உள்ளன. மேலும் கடல் பகுதிக்கும், சென்னையின் தரைப்பகுதியும் சமமாக இருப்பதால் வெள்ள நீரை வெளியேற்றுவது என்பது சவாலான ஒன்று.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது கடந்த நவம்பர் மாதம் முதல் பெய்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பினை சந்தித்தன. தொடர் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே நேரம் மழைநீரால் கிடைக்கும் தண்ணீர் முழுவதும் வீணாக கடலுக்கு செல்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.ஏனென்றால் மழை இல்லாத காலங்களில் தண்ணீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. அதை மாற்றி அமைக்க மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை நீர்வளத்துறை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மண்டலத்தை பொறுத்தவரை சென்னையை சுற்றியுள்ள 13 மாவட்டங்கள் இதன் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்த மாவட்டங்களில் மழை காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை ஏரி மற்றும் குளங்களில் சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை நீர்வளத்துறை தற்போது தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நீர் நிலைகளுக்கும் மழைநீர் வரவும், நீர் நிலை நிரம்பினால் உபரி நீர் அருகாமையில் உள்ள நீர் நிலைக்கு செல்லும் வகையிலும், நீர் நிலைகளில் இருந்து விளை நிலங்களுக்கு பாசனங்களுக்கு கொண்டு செல்லவும், கூடுதல் நீரை அருகாமையில் உள்ள ஆற்றில் கலந்து கடலில் சங்கமிக்கும் வகையில் பாசனம் மற்றும் வடிகால் கால்வாய் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. னால் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் போதிய பராமரிப்பின்றி போனதால் கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு மழைக்கும், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழைநீர் எல்லாம் வீணாக கடலில் தான் கலந்தது. இவற்றை நீர்நிலைகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ள நீர் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு சென்றாலே பெருமளவில் தண்ணீரை சேமிக்க முடியும்.

எனவே, கடந்த நிதியாண்டில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை மண்டலத்தில் கூடுதல் வெள்ளத் தணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், கூடுதல் வெள்ளத் தணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் ₹350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, சென்னை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் 22 பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடையும்பட்சத்தில் சென்னை மண்டலத்தில் வெள்ளம் ஏற்பட்டாலும் மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை சேமிக்க முடியும். இதனால் பெருமழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீரால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: சென்னை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் 7 வடிநிலம் மற்றும் 51 உப வடிநிலங்களில் 28 அணைகள், 3,998 ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் பாராமரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத் தணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த நிதியாண்டில் கூடுதல் வெள்ளத்தணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ₹350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

வெவ்வேறு வகையான 22 பணிகளுக்கு ஏற்ற மதிப்பீடுத் தொகை ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்படுகிறது. அதன்படி புதிய மூடுதளம் கால்வாய்கள் அமைத்தல், வாய்காலின் தடுப்புசுவர் அமைத்தல், கரைகளை பலப்படுத்தல், கரையை உருவாக்கும் பணிகள், கால்வாய் தூர்வாருதல், நீர் உள்வாங்கியில் தண்ணீர் புகாத கதவுகள் அமைக்கும் பணிகள் மற்றும் உள்வாங்கி அமைக்கும் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மொத்த பணிகளில் 6 பணிகள் 90 சதவீதத்திற்கும் மேல் முடிக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் இறுதிக்குள்ள முழுவதும் முடிக்கப்படும். அதன்படி வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும். இதனால் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுதல், வெள்ளத்தில் மக்கள் சிக்கி கொள்வது போன்றவை தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் வெள்ள
தடுப்பு பணிகள்
மொத்தப்
பணிகள் முன்னேற்றத்தில் உள்ளவை
22 22

செயல் திட்டம்
ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்
6 6 6 4

 ₹26 கோடியில் செம்பாக்கம் ஏரி உபரிநீர் வாய்க்காலில்லிருந்து நன்மங்கலம் ஏரி வரை சாலையின் கீழ் மூடுதளம் கால்வாய் அமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாய்காலின் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 ₹23.65 கோடியில் ஆரணியாற்றில் எல்.எஸ். 69.135 கி.மீ. இருந்து 103.600 கி.மீ. வரை மிக்ஜாம் புயலால் சேதமடைந்த கரைகளை பலப்படுத்தி புதிய கரையை உருவாக்குப்படுகிறது.
 ₹24.80 கோடியில் ஆலந்தூர் மணப்பாக்கம் கிராமத்தில் அடையாறு ஆற்றின் இரு பகுதிகளிலும் விமான நிலைய ஓடுபாதையில் முதல் மியாட் பாலம் வரை கிழக்கு புறக்கரையின் இருப்புறத்தை படுப்படுத்தல், தடுப்புச்சுவர், மழை நீர் சேகரிப்பு அமைத்தல், நீர் உள்வாங்கியில் தண்ணீர் புகாத கதவுகள் அமைக்கப்படுகிறது.
 ₹40 கோடியில் சோழவரம் ஏரி புனரமைத்தல் மற்றும் சீரமைத்தல், ஏரியின் பிரதான மதகு மேற்புறம் மற்றும் கீழ்புறம் சுவர் கட்டுப்படுகிறது.
 ₹18 கோடியில் கூவம் ஆற்றின் வடக்குப்பகுதி புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
 ₹10 கோடியில் நாரவரிகுப்பம் கிராமத்தில் உபரி நீர் கால்வாயில் செங்குன்றம் ஏரி உள்வாய் வரை வெள்ள தடுப்பு சுவர் மற்றும் நுழைவாயில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 ₹12 கோடியில் கிருஷ்ணா நகரில் உள்ள செங்குன்றம் ஏரியின் உபரி நீர் கால்வாயில் வெள்ள பாதுகாப்பு சுவர் மற்றும் கால்வாய் நுழைவாயில் கட்டும் பணிகள் உள்ளிட்ட 22 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 ₹34 கோடியில் முவரசம்பேட்டை ஏரியிலிருந்து கீழ்கட்டளை வாய்க்கால் வரை புதிய மூடுதளம் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
 ₹44 கோடியில் சோழிங்நகல்லூர் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரை சதுப்பு நிலம் வரை கூடுதலாக இரட்டை வழிகள் கொண்ட தரை கீழ் கால்வாய் அமைக்கப்படுகிறது.

The post கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க ₹350 கோடியில் வெள்ள தடுப்பு பணி: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Water Department ,Chennai ,
× RELATED பருவ மழை காலத்தை கருத்தில் கொண்டு நீர்...