×

குவைத் தீயில் கருகிய தமிழர்கள்… கதறும் உறவினர்கள்… நெஞ்சை நொறுக்கும் உருக்கமான தகவல்கள்

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கும் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சமையலறையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 41 இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர். இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு (எ) கருப்பணன் ராமு, திருச்சியை சேர்ந்த ராஜூ எபினேசர், தஞ்சையை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய், கடலூரை சேர்ந்த சின்னதுரை, கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் வீராசாமி, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர் ஆகிய 7 தமிழர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:
* 26 ஆண்டுகால பணி நிறைவடைந்து ராமநாதபுரத்துக்கு கிளம்பியவர் தீயில் சிக்கி உயிரிழந்த சோகம்
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (எ) கருப்பணன் ராமு (65). இவரது மனைவி குருவம்மாள் (55), மகள் சத்யா, மகன் சரவணக்குமார். குடும்பத்தினர் தற்போது ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தானில் சொந்த வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். சத்யாவிற்கு திருமணம் முடிந்து, தென் ஆப்ரிக்காவில் கணவருடன் வசிக்கிறார். கருப்பணன் ராமு 26 ஆண்டுகளாக குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். தற்போது சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து 26 ஆண்டுகள் பணி செய்ததாலும், வயது முதிர்வின் காரணமாகவும் பணியை நிறைவு செய்ய விரும்பியதால் குவைத்தில் இருந்து சொந்த ஊர் வந்து செட்டில் ஆக முடிவு செய்துள்ளார்.

கடந்த ஜூன் 11ம் தேதி கருப்பணன் ராமுவின் விசா காலம் முடிந்துவிட்டது. அவர் வேலை பார்த்த நிறுவனம், ஊழியருக்கான சலுகைகள், பணப்பலன்கள் அனைத்தையும் ஓரிரு நாளில் வழங்கி அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கருப்பணன் ராமு தனது குடும்பத்திற்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில்தான் அவர் தங்கி இருந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் விபத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்துள்ளார். இதுகுறித்து கருப்பணன் ராமுவின் நண்பர்கள் மூலம் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுபற்றி கருப்பணன் ராமுவின் மகன் சரவணக்குமார் கூறுகையில், ‘‘ஓய்வு பெற்று கடைசி காலத்தில் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ தந்தை விரும்பினார். கடந்த 11ம் தேதி அவரது விசா காலக்கெடு முடிந்தது. அவருக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் தர வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட சலுகைகளை பெற ஒரு நாள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 12ம் தேதி அவர் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் கோர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிசோதித்தபோது இறந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இரவில் போனில் பேசிவிட்டு தூங்கச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. எனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

* உயிரோட இருக்காரா… இல்லையா ஒண்ணுமே தெரியலையே… சின்னத்துரை மனைவி சத்தியா கண்ணீர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை (42). இவரது மனைவி சத்தியா (35). குழந்தை இல்லை. டிப்ளமோ கேட்டரிங் முடித்த சின்னதுரை தனது திருமணத்திற்கு முன்பு 3 வருடம் குவைத்தில் பணிபுரிந்தார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் 3 வருடம் குவைத்தில் வேலை செய்த அவர், ஒப்பந்தம் முடிந்தவுடன் சொந்த ஊர் வந்துள்ளார். பின்னர் அருகிலுள்ள லால்பேட்டை தனியார் உணவகத்தில் தலைமை சமையலராக 6 மாதங்கள் வேலை பார்த்துள்ளார்.

இதனிடையே ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து சின்னத்துரைக்கு அழைப்பு வரவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் குவைத் சென்ற அவர், அங்கு அசிஸ்டண்ட் ஸ்டோர் கீப்பர் வேலை செய்து வந்தார். இதற்காக அவருக்கு அந்நிறுவனம் சார்பில், குவைத்தின் தெற்கு பகுதியிலுள்ள அகமதி கவர்னரகத்துக்குட்பட்ட மங்காப்பில் அடுக்கு குடியிருப்பு வளாகத்தில் வீடு அளித்துள்ளனர். அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சின்னத்துரை பலியானார்.
இதுபற்றி அவரது மனைவி சத்தியா கூறுகையில், ‘எனது கணவர் உயிரோட இருக்கிறாரா, இல்லையா என இதுவரை தெரியவில்லை.

தினமும் இரண்டு முறையாவது என்னிடம் போனில் பேசுவார். அப்படி இருக்க சம்பவம் கேள்விப்பட்ட 12ம் தேதி மாலை முதல் அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்தோம். இணைப்பு கிடைக்கவே இல்லை. அவருடைய நண்பர்கள் போன் செய்து தீ விபத்து நடந்த பிளாட்டில்தான் சின்னத்துரை தங்கி இருந்தார் என தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் கூட எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நாங்கள் எப்படி இங்க நிம்மதியா இருக்க முடியும்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார். சின்னதுரையின் உடலை சொந்த ஊருக்கு உடனே கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் சின்னதுரையின் மனைவி சத்தியாவிற்கு அரசு பணி வழங்க வேண்டுமென்று முதல்வருக்கு அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

* சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் ஒரே மகனை இழந்துவிட்டேனே… கோவில்பட்டி மாரியப்பனின் தாய் கதறல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் மாரியப்பன் (41). இவரது மனைவி கற்பகலட்சுமி. 11 வயதில் விமலா என்ற மகளும், 8 வயதில் கதிர் நிலவன் என்ற மகனும் உள்ளனர். இங்குள்ள பள்ளியில் முறையே 6 மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். குவைத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில், மாரியப்பன் கடந்த 20 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள 6 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மாரியப்பன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பனின் மனைவி, தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவுக்கு வந்து விட்டு திரும்பிச் சென்றிருந்த நிலையில், மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாரியப்பனின் தாய் வீரம்மாள் கூறுகையில், ‘மாரியப்பன் எனது ஒரே மகன். குவைத்தில் வேலை பார்த்து வந்த அவன், கடந்த மார்ச் மாதம் 15 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான். விடுமுறை முடிந்து புறப்பட்டுச் சென்றவன் கடந்த 11ம் தேதி தொலைபேசியில் பேசினான். அப்போது குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டார்களா? என்று கேட்டான். இப்போதுதான் பள்ளிக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள் எனக் கூறினேன். அப்போதே ஏன் போன் பண்ணவில்லை எனக் கேட்டான். அப்போதே போன் பண்ணியிருந்தால் உன்னுடைய தூக்கம் கெட்டு விடும். அதனால் தான் இப்போது போன் செய்கிறேன் என்றேன். மறுநாள் (12ம் தேதி) போன் பண்ணுவதாக கூறி விட்டு வைத்து விட்டான்.

ஆனால் அவன் சொன்னபடி மறுநாள் போன் பண்ணவில்லை. நான் சிலமுறை போன் செய்தேன். அவன் எடுக்கவில்லை. அதன்பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. ஏற்கனவே அவனுக்கு 2 நாள் தலைவலி இருந்ததால் ஏதேனும் உடம்பு சரியில்லையா, லீவு எடுத்து விட்டானா? எனப் பதறிப் போனேன். அதன் பிறகுதான் தீ விபத்தில் எனது மகன் இறந்தது தெரிய வந்தது. ஒரே மகனையும் இழந்து விட்டேன். கொத்தனாராக வேலை செய்த என் கணவர், மாரியப்பன் சிறுவயதில் இருக்கும்போதே இறந்து விட்டார். எனது மகன் தான் குடும்பத்திற்காக இளம்வயதில் இருந்தே உழைத்து வந்தான். அவனது உழைப்புதான் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. தற்போது அவனையும் இழந்து விட்டோம். எங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும்’ என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

* கீழே குதித்து உயிர் தப்பிய ஊழியர்கள்
மாரியப்பனின் தாய் வீரம்மாள் கூறுகையில், ‘நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அவன் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்கு தெரியாது. அதிகாலை 3 மணிக்கு தான் தெரியும். உடனே நான் அவனுடன் தங்கியிருந்த மற்றவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு எனது பிள்ளை மாரியப்பனை எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து கீழே குதித்து விட்டோம். அவனையும் கீழே குதிக்க சொன்னோம். ஆனால், அவன் காலில் அடிபட்டு உள்ளது. பாதை வழியாக வருகிறேன் என்று கூறிவிட்டான், என்றனர். அதன் பிறகுதான் தீ விபத்தில் எனது மகன் இறந்தது தெரிய வந்தது’ என்றார்.

* மகன் உடலையாவது மீட்டுத்தாங்க… முகமது ஷெரீப்பின் தந்தை கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் தியாகி இப்ராஹிம் தெருவை சேர்ந்தவர் முகமது ஷெரீப். கடந்த 14 வருடமாக குவைத்தில் மெட்டீரியல் ஸ்டீல் சில்வர் கம்பெனியில் போர்மேனாக பணியாற்றிய நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது தந்தை யாகூப் ஷெரீப் கூறுகையில், எனது மகன் ஊருக்கு வந்துவிட்டு கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் மீண்டும் குவைத் திரும்பி சென்றார். வாட்ஸ் அப்பில் வந்த தகவலை அடுத்து எங்களது உறவினர்களுக்கு போன் செய்து கேட்டபோது இதுவரையில் அவரை காணவில்லை, தீயில் கருகி இறந்திருக்கலாம் என சந்தேகமாக கூறினர். ஆனால் நாங்கள் டிவிக்களில் வரும் செய்தியை பார்த்தால் அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து உடலை மீட்டு தர வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது என்றார். முகமது ஷெரீப்பிற்கு அஷ்ரப் யூனிசா என்ற மனைவியும், 5 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

* ஈரக்குலை எல்லாம் நடுங்குதே… தஞ்சை புனாப் ரிச்சர்ட் ராயின் பெற்றோர் உருக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனூரை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் (28) என்பவர் குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்திருக்கலாம் என கூறியிருப்பது பேராவூரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிச்சர்ட் ராயின் தந்தை மனோகர் (60) விவசாயி. தாய் லதா (55). இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் தான் புனாப் ரிச்சர்ட் ராய். இளைய மகன் ரூஷோ (25). அவர் கூறியதாவது: 2019 முதல் குவைத் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமான கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக அண்ணன் புனாப் ரிச்சர்ட் ராய் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை. தீவிபத்து ஏற்பட்ட போது எனது அண்ணனின் நண்பர், மாடியிலிருந்து குதித்து கால் முறிந்த நிலையில் குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னோடு சேர்ந்து குதிக்கச்சொன்னபோது ரிச்சர்ட் குதிக்க மறுத்து மாடிப்படி வழியாக இறங்கி ஓடியதாக தெரிவித்தார். அதனால் தப்பிச்சென்று வேறு எங்கும் உள்ளாரா, விபத்தில் சிக்கிக் கொண்டாரா என தெரியவில்லை. இதுவரை எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக குவைத் நாட்டிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. விபத்தில் சிக்கி பலியாகியிருந்தால் தமிழக அரசு அவரது உடலை மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினர் எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றார்.

ரிச்சர்ட்டின் பெற்றோர் மனோகர் மற்றும் லதா கூறுகையில், ‘என் மகனால்தான் ஊரில் புது வீடு கட்டியிருக்கிறோம். கிரகப்பிரவேசத்தில் அனைத்து வேலைகளையும் அவன் தான் செய்தான். சொந்த மாடி வீடு கட்டி குடியேறியதில் அவனுக்கு ரொம்பவே திருப்தி. எங்ககிட்ட, இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானேனு கேட்டான். அதன் பிறகு இரண்டு மாதங்கள் வரை ஊரில் தங்கியிருந்தான். புது வீடு கட்டியாச்சு, பெண் பார்க்குறோம், கல்யாணத்த முடிச்சுட்டு ஊருக்கு போகலாம் என்றோம். இன்னும் கொஞ்சம் நாள் போயிட்டு வந்தா பணப்பிரச்னை இருக்காது என்று கூறிவிட்டுத்தான் குவைத்துக்கு போனான். தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும் செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறது. சிலர் சொல்றதை கேட்கும்போது எங்களுக்கு ஈரக்குலை நடுங்குது. நீ கட்டுன வீட்டில் வாழணும், பத்திரமா வந்துருப்பானு கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரமும் அவன் தான். என மகனை பத்திரமாக மீட்டுத்தாருங்கள்’ என கண்ணீர் மல்க கூறினர்.

* தந்தையின் உண்மை நிலை தெரியலையே… திருச்சி ராஜூ எபிநேசரின் மகன், மகள் பேட்டி
திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியை சேர்ந்த ராஜூ எபிநேசர் (54) என்பவரும் தீவிபத்தில் உயிரிழந்ததாக குவைத் அறிவித்துள்ளது. தனது தந்தை நிலை என்ன என்று கேட்டு அவரது மூத்த மகன் குணசீலன் (32) நேற்று திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். இதுகுறித்து குணசீலன் கூறியதாவது: கடந்த 2 தினங்களுக்கு முன்புகூட தொலைபேசியில் தந்தையிடம் பேசினேன். இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்த உடனே நாங்கள் தொடர்ந்து அவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் அங்கிருந்து கிடைக்கவில்லை. அரசு கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். ஆனால் இதுவரை அவருடைய நிலையை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. தந்தை கடந்த 2 வருடமாக டிரெய்லர் ஓட்டுநராக பணியாற்றி வரும் கம்பெனிக்கு தொடர்பு கொண்ட போது அவர்கள் என்னுடைய தந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டால் இதுவரை அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்றுவருவதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். அடுத்த மாதம் அவருக்கு விசா வின் காலம் முடிகிறது. வீட்டிற்கு திரும்பி வருவார் என்று ஆவலுடன் இருந்தோம். இதற்காக தாய் ராஜேஸ்வரி (53), தங்கை மீனாட்சி(28) ஆகியோர் காத்திருக்கிறோம். தம்பி சம்பத்குமார் (24) அபுதாபியில் பணியாற்றி வருகிறார். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எனது தந்தையின் நிலை குறித்து முறையாக தகவல் வௌியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி ராஜேஸ்வரி கூறுகையில், ‘11ம் தேதி மாலை 6.30 மணி அளவில் கணவர் என்னுடன் போனில் பேசினார். அப்பொழுது அவர் அறையில் இருப்பதாகத்தான் சொன்னார். அதற்குப்பிறகு என்ன நடந்ததுன்னே தெரியலை’ என்றார். மகள் மீனாட்சி கூறுகையில், ‘தந்தை ராஜு மற்றும் சென்னையை சேர்ந்த கோவிந்தன் ஆகியோர் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அவசர சிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். டிவியில் தந்தை இறந்துவிட்டதாக பெயர் மட்டும் போட்டு செய்தி வெளியானது. ஐசியூவில் சிகிச்சையில் இருந்தால் அவர் சிகிச்சையில் இருப்பது போல் போட்டோ எடுத்து போட வேண்டும். இல்லை என்றால் தந்தையின் நிலை என்னவென்று முழுவிவரம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

* என் கணவர் உடலை பார்த்தால்தான் நம்புவேன்… பதைபதைப்புடன் ராயபுரம் சிவசங்கரின் மனைவி
சென்னை ராயபுரம் கார்ப்பரேஷன் காலனியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர் குவைத்தில் டிரைவர் வேலைக்காக 2 ஆண்டு ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்றார். ஓராண்டு முடிந்து இன்னும் ஓராண்டு பணி இருக்கும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிவசங்கரனும் உயிரிழந்துள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிவசங்கரனுக்கு மனைவி ஹேமகுமாரி, கல்லூரி படித்து முடித்த மகளும், 12ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

சிவசங்கரின் மனைவி ஹேமகுமாரி கூறுகையில், ‘எனது கணவர் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசியில் அவரிடம் பேசினேன். வேலை இருக்கு, இல்லை என்று குழப்பமாகவே பேசினார். வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறினேன். சரி தூங்கப் போகிறேன் என்று போனை வைத்துவிட்டுச் சென்றார். காலையில் தொடர்பு கொண்டால் அவருக்கு போன் போகவில்லை. என்னுடைய மகளும் தொடர்பு கொண்டாள். அப்போதும் போன் போகவில்லை. இதுகுறித்து என் கணவரின் நண்பரிடம் கேட்டேன். அவரும் தொடர்பு கொண்டதில் போன் போகவில்லை என்று கூறினார். அதன் பிறகுதான், என் கணவர் தங்கி இருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் என்னுடைய கணவரின் பெயர் இறந்தவர்கள் லிஸ்ட்டில் இல்லை என்று கூறினார்கள். பின்னர் அவர் மிஸ்ஸிங் என்று கூறினார்கள். இப்போது மூச்சு திணறலில் அவர் உயிரிழந்ததாக கூறுகிறார்கள்.

முகம் கருப்பாக இருந்ததால் அவரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். ஏஜென்டுகளை தொடர்பு கொண்டால், அவர்கள் தொலைபேசியில் சரியான தகவல் கூறவில்லை. என்னுடைய கணவரின் உடலை கொண்டு வர வேண்டும். அவர் முகத்தை பார்த்தால்தான் நான் நம்புவேன். தயவு செய்து அவர் முகத்தை காட்டுங்கள். அவர் எங்கோ ஒரு இடத்தில் உயிருடன் இருக்கிறார் என்று என்னுடைய உள் மனது கூறுகிறது. முடிந்த அளவுக்கு அவரை கொண்டு வந்து என்னுடன் சேருங்கள். அந்த இடத்தில் எத்தனை உயிர் போயிருக்கும், அவர்கள் குடும்பம் என்ன செய்யும், இப்போது நாங்கள் எல்லாம் அனாதையாக இருக்கிறோம். என்னுடைய பிள்ளைகளை நான்தான் காப்பாற்ற வேண்டும். ஆயிரம் பேர் இருந்தாலும் என் கணவர் எங்களுடன் இருப்பது போல் வருமா?’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

* முதல்வர் இரங்கல்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793 வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901.

The post குவைத் தீயில் கருகிய தமிழர்கள்… கதறும் உறவினர்கள்… நெஞ்சை நொறுக்கும் உருக்கமான தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Mangab, Ahmadi Province ,southern ,Indians ,
× RELATED குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ...