×

நில மோசடி; முன்ஜாமீன் கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் மனு: கரூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

கரூர்: நில மோசடி வழக்கு தொடர்பாக அதிமுக மாஜி அமைச்சர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் என்பவர், கடந்த 9ம்தேதி கரூர் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கரூர் மாவட்டம் வெள்ளியணையை சேர்ந்த ஷோபனா என்பவர், செட்டில்மெண்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக ஏப்ரல் 6ம்தேதி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன், உறவினர்கள் 4 பேர் வந்தனர்.

இதில் குறிப்பிடப்பட்ட சொத்து வெள்ளியணை சார்பதிவாளர் எல்லைக்குட்பட்டது என்பதால் சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த ஆவண பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது. அதன் பிறகு, அசல் ஆவணம் தொலைந்து விட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஆர்எஸ் நகலை ஆவணதாரர் சார்பாக, 2 பேர் வந்து நேரில் என்னிடம் அளித்தனர். இதன்படி, வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று மே 10ம்தேதி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. மறுநாள் ஷோபனாவின் தந்தை, போலியான நான்ட்ரேஷபில் (கண்டுபிடிக்க முடியவில்லை) சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனு அளித்தார்.

இது குறித்து கரூர் மாவட்ட பதிவாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அவரிடம், இருந்து வரப்பெற்ற கருத்துருவின்படி, வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் இதுபோன்ற நான்ட்ரேஷபில் சான்றிதழ் கொடுக்கவில்லை. எனவே பத்திரப்பதிவுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் போலியானது. எனவே, கூட்டு சதி செய்து சொத்தை அபகரித்து பதிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இது குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்ற போது அதில், சம்பந்தப்பட்ட 2 பேர், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, எனக்கு பாதுகாப்பு வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையத்தில் ஷோபனா உட்பட 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த 9ம்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் பெயர் இல்லாத நிலையில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு நேற்றுமுன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முக சுந்தரம், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

The post நில மோசடி; முன்ஜாமீன் கேட்டு அதிமுக மாஜி அமைச்சர் மனு: கரூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Karur ,minister ,Karur Melakarur ,Deputy Registrar ,P) ,Muhammad Abdul Khader ,Dinakaran ,
× RELATED ரூ.100 கோடி சொத்து அபகரிப்பு அதிமுக...