×

சூர்யா போன்ற அனுபவ வீரர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

நியூயார்க்: 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் நியூயார்க்கில் நேற்று நடந்த 25வது லீக் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த அமெரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நிதீஷ்குமார் 27, ஸ்டீவன் டெய்லர் 24 ரன் அடித்தனர். இந்திய பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 9 ரன் மட்மே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் கோஹ்லி டக்அவுட் அக கேப்டன் ரோகித்சர்மா 3, ரிஷப் பன்ட் 18 ரன்னில் அவுட் ஆகினர். சூர்யகுமார் 50 (49 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 31 ரன் அடித்தனர். 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஹாட்ரிக் வெற்றியுடன் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. கடைசி போட்டியில் வரும் 15ம் தேதி கனடாவுடன் மோத உள்ளது. அமெரிக்கா முதல் 2 போட்டியில் கனடா, பாகிஸ்தானை வென்ற நிலையில் நேற்று முதல் தோல்வியை சந்தித்தது. தனது கடைசி போட்டியில் அயர்லாந்துடன் நாளை மோதுகிறது. இதில் வென்றால் சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கிடைக்கும். நேற்று வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கை சேஸ் செய்வது என்பது கடினம் தான். சூர்யகுமார், துபே சிறப்பாக ஆடி வெற்றியை தேடி தந்துள்ளனர். அமெரிக்க அணியில் உள்ள பல வீரர்களுடன் நாங்கள் விளையாடி இருக்கிறோம். அவர்களின் முன்னேற்றத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் கடின உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது. இங்கு ரன் சேர்ப்பது மிகவும் கடினம் என்பதால் பவுலர்கள் குறைந்த இலக்கில் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். அதற்கு ஏற்றார் போல் அர்ஷ்தீப் அபாரமாக பந்துவீசினார்.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மிகப்பெரிய நிம்மதியை கொடுக்கிறது. நியூயார்க் மைதானத்தில் ஆடுவது சவாலான காரியமாக இருந்தது. இங்கு யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. சூர்யா தனக்கு இப்படியும் விளையாட தெரியும் என்று காட்டியிருக்கிறார். இதை தான் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், என்றார். அர்ஷ்தீப் சிங் மகிழ்ச்சி ஆட்டநாயகன் அர்ஷ்தீப் சிங் கூறுகையில், “எனது செயல்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சி. கடந்த 2 போட்டியில் நான் கொஞ்சம் ரன்களை கொடுத்ததால் திருப்திகரமாக இல்லை. பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருந்தது. பும்ராவும் இந்த பிட்ச்சில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற வழிகாட்டுதலை எனக்கு காண்பித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் போது உடல் தகுதியையும் தொடர்ச்சியாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். எங்கள் அனைத்து பவுலர்களும் நன்றாக செயல்பட்டனர்’’ என்றார்.

The post சூர்யா போன்ற அனுபவ வீரர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Suriya ,India ,Rohit Sharma ,New York ,9th ICC T20 World Cup ,USA ,America ,Dinakaran ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு