×

மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா?

– ரேவதி கிருஷ்ணன், விழுப்புரம்.
நம்முடைய ஆன்மிகப் பெரியவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள். பாரதி, ‘‘காலா உன்னை நான் சிறு புல் என மதிக்கின்றேன்; என் காலருகே வாடா, உன்னை சற்றே மிதிக்கின்றேன்’’ என்று காலனையே அதட்டியவர். “அச்சமில்லை அச்சமில்லை” என்று கம்பீரமாகப் பாடியவர். அப்பர், ‘‘கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நம சிவாயவே” என்று துணிந்து நின்றவர். ஒருமுறை மாவீரன் நெப்போலியனிடம் ஒருவர் கேட்டார்.
‘‘மரணத்தை பற்றிய அச்சம் உங்களுக்கு இல்லையா?’’
‘‘இல்லை’’
‘‘வியப்பாக இருக்கிறது. மரணத்தை கண்டு அஞ்சாதவர்கள் இருக்க முடியுமா?’’
‘‘நான் இருக்கிறேன்’’
‘‘அதுதான் எப்படி?’’ நெப்போலியன் சொன்னான்.
‘‘நான் இருக்கும் வரை மரணம் என்னை நெருங்காது. மரணம் வந்த பின்னால் நான் இருக்க மாட்டேன். நான் இல்லாதபோது வரும் மரணத்தைக் கண்டு நான் ஏன் அஞ்ச வேண்டும்?’’ என்றார்.

வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய உயர்ந்த பாடம் எது?

– விஜயபிரகாஷ், துவரங்குறிச்சி.
விவேகானந்தர் இதற்கு சரியான விடையை அளித்திருக்கிறார். “செயலின் பலனில் செலுத்தும் அதே அளவு கவனத்தை, அக்கறையை அந்த செயலைச் செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும்” என்பது என் வாழ்வில் நான் கற்று உயர்ந்த பாடங்களில் ஒன்று என்பது விவேகானந்தர் வாக்கு. அதை நாமும் பின்பற்றலாம். வெற்றி என்பது முக்கியம் தான். ஆனால் அதை பெறுகின்ற வழி அதைவிட முக்கியம். தவறான வழியில் பெற்ற வெற்றியும் தோல்வியே. சரியான வழியில் நடந்து பெற்ற தோல்வியும். வெற்றியே.

அரசமரத்தை சுற்றி வா என்கிறார்களே. அது என்ன அரச மரத்திற்கு அத்தனை சிறப்பு?

– மதுசூதனன், புதுக்கோட்டை.
மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன் “ஸர்வ வ்ருக்ஷாணாம் அஸ்வத்த’’ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார். ஒரு அரசமரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்கலோக பதவி கிட்டும் என்று, “விருஷ ஆயுர் வேதத்தில்’’ குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவில்ஆக்ஸிஜன் தரும் மரமாக அரசமரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்ற சொல்லி இருப்பதில், மருத்துவக்காரணங்கள் உள்ளன. அரசமரத்தின் அதிக பிராண வாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால், எண்ணம் சுத்தமடைகிறது. அதனால் புத்தி தெளிவாகி ஞானம் பிறக்கிறது. புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரசமரமே.

அருள்ஜோதி

 

The post மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா? appeared first on Dinakaran.

Tags : Revathi Krishnan ,Villupuram ,Bharati ,Kala ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.....