×

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்: துணை முதல்வரானார் நடிகர் பவன்கல்யாண்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

திருமலை: ஆந்திர மாநிலம் கன்னவரம் விமான நிலையம் அருகே நடந்த பிரமாண்ட விழாவில், ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் அப்துல்நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக நடிகர் பவன்கல்யாண் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆந்திராவில் கடந்த 13ம் தேதி நடந்து முடிந்த 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21, பாஜ 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது.

இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே புதிய அரசின் பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 11.27 மணியளவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக 4ம் முறையாக பதவிஏற்றார். அவருக்கு கவர்னர் அப்துல்நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில் துணை முதல்வராக நடிகர் பவன்கல்யாண் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து சந்திரபாபுவின் மகன் லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். (பாஜகவுக்கு ஒரு அமைச்சரும், பவன்கல்யாண் கட்சிக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது).
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி நட்டா, ராம் மோகன், நிவாஸ், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, செல்வம், ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையொட்டி விழா நடைபெற்ற பகுதியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்: துணை முதல்வரானார் நடிகர் பவன்கல்யாண்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Chief Minister ,Pawan Kalyan ,Deputy Chief Minister ,PM Modi ,Amit Shah ,Tirumala ,Chief Minister of ,Andhra ,Pradesh ,Cannavaram Airport ,Andhra Pradesh ,Governor ,Abdul Nasir ,Prime Minister… ,Andhra Chief Minister ,
× RELATED கட்சியினருக்கு பரிசாக தந்து...