×

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.  ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரியாசியில் கடந்த 9ம் தேதி சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் தீவிரவாத அமைப்பின் மற்றொரு அமைப்பான டிஆர்எஃப் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குல் சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே கதுவா பகுதியில் புகுந்த தீவிரவாதிகள், ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். உஷாரான பாதுகாப்புப் படையினர் உடனடி பதிலடி கொடுத்ததில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களுக்குப் பின் தோடா பகுதியில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் நடந்தது. ரியாசியின் அனைத்துப் பகுதிகளையும் ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில், தற்போது கதுவா, தோடா பகுதியிலும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளது. தீவிரவாதிகள் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, வனப்பகுதிக்குள் ஓடிவிடுவதால் ட்ரோன்கள் உதவியுடன் அவர்களை தேடும் பணி தொடர்கிறது. 3 நாட்களில் அடுத்தடுத்த 3 இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘தோடாவின் சத்ரகாலாவில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் சிறப்பு காவல் அதிகாரி ஆவார். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் டைகர் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளை தாங்கள் பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவர்கள் மக்களிடம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் இரவு முழுவதும் மக்கள் பீதியில் இருந்தனர். குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது’ என்றன.

The post 3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir Tiger ,Kashmir ,Jammu ,Riazi ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை