×

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம் : பசுந்தாள் உர விதைகள், விவசாயிகளுக்கு விநியோகம்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.6.2024) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், 2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள். கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து. உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கியது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம்இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர்பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம், பயிர்பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்”

வேளாண்மை உழவர் நலத்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தற்போது வேளாண்மையில் ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள். களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் 2024-25 ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாயில், 22 இனங்களுடன் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்என்று அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு. உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும். மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது “பசுந்தாளுரப் பயிர்கள்”. இதன் சாகுபடியை விவசாயிகளிடத்தில் ஊக்குவித்திட ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஏக்கரில் 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அதன்படி, விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, முதலமைச்சரின் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 2 இலட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.

குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள் மற்றும் விவசாய கருவிகள் வழங்குதல்

வேளாண்மை உழவர் நலத்துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண் இயந்திரங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் காரணத்தால், அவற்றைக் கடைகோடியில் இருக்கும் சிற்றூருக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பு அரசுக்கு இருப்பதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வட்டார அளவில் வேளாண் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவும்பொருட்டு, டிராக்டர்கள். ரோட்டவேட்டர்கள். எந்திரக் கலப்பைகள். கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு துறையின் இ-வாடகை செயலியின் மூலமாக குறைந்த வாடகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 10.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 90 டிராக்டர்கள், 180 கொத்துக் கலப்பைகள் மற்றும் 90 ரோட்டவேட்டர்கள் ஆகியவற்றினை அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி வழங்குதல்

வேளாண்மை – உழவர் நலத்துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன்வாய்ந்த ஓட்டுனர்களை உருவாக்கிட டிராக்டர். அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர். திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு. உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் திரு. ஆர். எஸ். ராஜகண்ணப்பன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலைத் துறை இயக்குநர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் இரா. முருகேசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம் : பசுந்தாள் உர விதைகள், விவசாயிகளுக்கு விநியோகம்!! appeared first on Dinakaran.

Tags : Mannuiur Kapom ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Agriculture and Farmers Welfare Department ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...