×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்

*அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் கடந்த 10ம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் எந்தவொரு அரசு அலுவலகங்களிலும் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் படங்கள் வைத்திருக்கக்கூடாது. உடனடியாக அகற்றிட வேண்டும். அரசியல் கட்சியினை சார்ந்த இறந்துபோன தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் சிலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் அகற்றிட வேண்டும்.

மேலும் வரலாற்று சிறப்புமிக்க இறந்துபோன தேசிய தலைவர்கள், கவிஞர்கள், இந்திய ஜனாதிபதி மற்றும் ஆளுனர் புகைப்படம் அலுவலகங்களில் வைத்துக்கொள்ள தடையேதுமில்லை. தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசிய கொடிகள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணித்திட வேண்டும். துறைசார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகள் மருத்துவ சிகிச்சைகளின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவர் எழுத்துக்கள், சுவொரட்டிகள், காகிதங்கள் அல்லது ஏனைய யாதொரு வகையிலான சேத நடவடிக்கைகள், விளம்பர பதாகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து 24 மணி ேநரத்திற்குள் அகற்றிடவேண்டும்.

ரயில், பேருந்து நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், தொலைபேசி கம்பங்கள், நகராட்சி, உள்ளூர் அமைப்புகளின் கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் சுவர் எழுத்து, சுவொரட்டிகள், விளம்பர பதாகைகள், கொடிகள் போன்ற வகையிலான அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் 48 மணிநேரத்திற்குள் அகற்றிட வேண்டும்.
தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள், உள்ளூர் சட்டத்திற்குட்பட்டும், நீதிமன்றத்தின் ஆணைக்குட்பட்டும் ஏதேனும் அரசியல் விளம்பரம் வைக்கப்பட்டிருப்பின் உடனடியாக அகற்றிட வேண்டும்.

அரசின் திட்டங்களுக்காக புதிய நிதி ஒப்பளிப்பு மேற்கொள்ளக்கூடாது. முழுமையாக நிறைவடைந்த பணிகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களின் முழு திருப்தியுடன் நிதி அளிப்பதற்கு எவ்வித தடையுமில்லை. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதிபெறாமல் தொடரலாம். தேர்தல் நடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சியினரும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் எஸ்பி தீபக்சிவாச் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Vikravandi ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்!