×

கலசப்பாக்கம் அருகே பரபரப்பு தொட்டியில் தண்ணீர் குடித்த 2 மாடுகள் சுருண்டு விழுந்து சாவு

*விஷம் கலந்ததாக புகார்

கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே தொட்டியில் தண்ணீர் குடித்த 2 பசுமாடுகள் சுருண்டு விழுந்து இறந்தது. தொட்டியில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு, விவசாயி. இவர் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தனுசுக்கு உடல்நிலை சரியில்லாமல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை தனுசுவின் மனைவி சத்யா, நிலத்திற்கு சென்று பசுமாட்டில் பால் கறந்து விட்டு பின்னர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். காலை 9 மணி அளவில் மீண்டும் நிலத்திற்கு வந்து மாடுகளுக்கு தொட்டியில் இருந்த தண்ணீரை குடிக்க வைத்தார். தண்ணீர் குடித்த 2 பசுமாடுகளும் சில நிமிடங்களில் சுருண்டு விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, பாடகம் அரசு கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த கால்நடை மருத்துவர், 2மாடுகளையும் சோதனை செய்தபோது அவை இறந்தது தெரியவந்தது. 3வதாக தண்ணீர் குடித்த பசுமாடுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் மற்றும் லாடவரம் விஏஓ ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசில் சத்யா புகார் செய்தார். புகாரில், மாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது அதில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருந்தது. யாரும் இல்லாத நேரத்தில் மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை மர்ம நபர்கள் கலந்துள்ளனர்.

அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இறந்த பசுமாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.அதன்பேரில் கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டியில் தண்ணீர் குடித்த பசுமாடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கலசப்பாக்கம் அருகே பரபரப்பு தொட்டியில் தண்ணீர் குடித்த 2 மாடுகள் சுருண்டு விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Thiruvannamalai district ,
× RELATED விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்த...