×

110 ஆண்டுகளை கடந்த மண்டபம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

*கூடுதல் நடைமேடைகள் தேவை

*அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை

மண்டபம் : மண்டபம் ரயில் நிலையம் துவங்கப்பட்டு 110 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால் பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு ராமேஸ்வரத்தின் துணை ரயில் நிலையமாக அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக வரலாற்று சிறப்புமிக்க 12 ஜோதி லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் அமைந்திருக்கிறது. அதுபோல 1964 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்து நடைபெற்று பெரிய வர்த்தக நிறுவனமாக ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடி பகுதி திகழ்ந்து வந்தது. இந்த நகரம் புயலுக்குப் பின்பு அழிந்து போனதால் நகரத்தின் முக்கியத்துவம் அழிந்து விட்டது.

இந்நிலையில் இந்திய மணல் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கு வகையில் மண்டபம் பகுதியில் இருந்து பாம்பன் கடலில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது. இதன் வழியாக 1914ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி முதல் இந்தியாவின் பல பகுதியில் இருந்து இணைப்பு ரயில்கள் மூலம் மண்டபம் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டு, பாம்பன் கடல் வழியாக ராமேஸ்வரம்,தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

1914ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை 50 ஆண்டுகளாக மண்டபம் ரயில் நிலையம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய ரயில் நிலையத்திற்கு ஒரு முக்கிய துணை ரயில் நிலையமாக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து மண்டபம் ரயில் நிலையம் 110 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட நாள் முதல் இன்றைய நாள் வரை அலுவலக கட்டிடங்கள்,பிளாட்பாரங்கள், தண்டவாளம் பாதைகள் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் ராமேஸ்வரத்தில் ரயில் நிலையத்திற்கு ஒரு துணை ரயில் நிலையமாக மண்டபம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாம்பன் பாலப்பணிகள் முடிந்த பின்பு ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் பாலம் பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து ராமேஸ்வரத்திற்கு விரைவில் துவங்கப்படவுள்ளது. அதன் பின்னர் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து ஆன்மிக ஸ்தலங்களை இணைக்கும் வகையிலும் சுற்றுலா பகுதிகளை இணைக்கு வகையிலும் கேரளா, ஆந்திரா கர்நாடகா மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலான ரயில்களை ராமேஸ்வரத்திற்கு நேரடியாக இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கன்னியாகுமரி,மதுரை, திருச்சி, சென்னை உள்பட பல வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மண்டபம் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கி செல்லவும், ஏற்றிச் செல்லவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபம் பகுதியை சுற்றி மண்டபம் பேரூராட்சி மற்றும் மறைக்காயர்பட்டிணம், வேதாளை, சாத்தக்கோன் வலசை, பிரப்பன்வலசை, நொச்சு ஊரணி ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் இருந்து பல்வேறு தொழில்களில் வர்த்தக ரீதியாக செயல்பட்டு வரும் பெரும் நகரங்களான திருப்பூர், சென்னை திருச்சி,மதுரை, நாமக்கல், சேலம் கன்னியாகுமரி, தூத்துக்குடி,சிவகாசி உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வெளியூர்களில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கவும் வெளியூர்களில் கூலித்தொழிலுக்கு செல்லவும், வெளியூர்களில் தங்கி பெரிய நிறுவனங்களில் வேலை செய்தும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வாழ்வாதாரத்துக்காக சென்று வருகின்றனர். அதனால் இந்த பகுதியில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வசதிக்கேற்ப ரயில்வே நிர்வாகம் ரயில் சேவைகளை செயல்படுத்த வேண்டு என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் தீவில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வரும்போது, இயற்கையின் சீற்றம் சூறாவளி காற்று காரணமாக அவ்வப்போது நிறுத்தப்படும். அப்போது வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் சுற்றுலா வாசிகளும் அச்சத்துடன பயணிக்க முடியாமல் தவித்து வருவார்கள். அந்த மாதிரி சூழ்நிலையில் ரயில்வே நிர்வாகம் ராமேஸ்வரத்திற்கு அருகேயுள்ள மண்டபம் ரயில் நிலையத்திற்கு சாலை பாலம் வழியாக வாகனங்கள் மூலம் பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து அந்தப் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பயணிகளை ரயில்களில் ஏற்றி அனுப்புவது கடந்த 110 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நவீன காலத்தில் அதிகமான பயணிகள் பயணித்து வரும் நிலையில் பாம்பன் கடலில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் பட்சத்தில், மண்டபம் பகுதியில் இருந்து ரயில் போக்குவரத்து இயக்குவதற்கு தற்போது உள்ள நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு ஒரு துணை ரயில் நிலையமாக எந்த நேரத்திலும் இயங்குவதற்கு பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு 110 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதலாக தங்கும் அறைகள் அமைக்க வேண்டும். அதிநவீன வசதியுடன் கூடிய குளிர்சாதனங்கள் இணைக்கப்பட்ட பயணிகள் ஓய்வு அறைகள் அமைக்க வேண்டும். முன்பதிவு பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வசதிகள், கழிப்பறைகள்,குளியல் அறைகள் கூடுதலாக அமைக்க வேண்டும். கூடுதலான நடைமேடைகள் அமைக்க வேண்டும்.

மண்டபம் நகர் பகுதி வழியாக ரயில் நிலையத்திற்கு வருவதற்கு பதிலாக, ராமநாதபுரம், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து நேரடியாக ரயில் நிலையத்திற்கு வருவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ராமேஸ்வரம், ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே பறந்த நிலப்பரப்பில் ரயில் நிலையம் அமைத்திருப்பதால் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் உணவகங்கள் உட்பட பயணிகளின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 110 ஆண்டுகளை கடந்த மண்டபம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Hall train station ,Hall railway station ,Rameswarat ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை...