×

சிவகங்கையில் கைதானவர் வீட்டில் 10 சவரன் பறிமுதல் கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீசார் அதிரடி ஆரணியில் 20 சவரன், ₹5 லட்சம் திருட்டு சம்பவம்

ஆரணி, ஜூன் 12: ஆரணியில் அதிமுக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன், ₹5 லட்சம் திருடிய வழக்கில் சிவகங்கையில் கைதானவரை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரது வீட்டில் இருந்து 10 சவரன் நகைகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியில் கேபிகே நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(48). அதிமுக பிரமுகரான இவர் ஆரணியில் இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தன் தனது குடும்பத்துடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.

பின்னர், திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு ஆனந்தன் தனது குடும்பத்துடன் மறுநாள் காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்கம் கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 20 சவரன் நகை, ₹5 லட்சம், 350 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசில் ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் தென்மாதிமங்கலம் கிராமத்தை ராமஜெயம்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆரணி டவுன் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமஜெயம் திருட்டு வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள கிளைசிறையில் அடைக்கப்பட்டது, தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து ஆரணி டவுன் போலீசார் ராமஜெயத்தை நீதிமன்ற காவல் எடுத்து நேற்று விசாரணை நடத்தினர். அப்போது ஆரணியில் ஆனந்தன் வீட்டில் திருடிய நகைகளில் 10 சவரன் மட்டும் தென்மாதிமங்களத்தில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ராமஜெயம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ராமஜெயத்தை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மீண்டும் சிவகங்கை மாவட்டம் திப்புத்தூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

The post சிவகங்கையில் கைதானவர் வீட்டில் 10 சவரன் பறிமுதல் கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீசார் அதிரடி ஆரணியில் 20 சவரன், ₹5 லட்சம் திருட்டு சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Arani ,AIADMK ,Savaran ,
× RELATED ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி...