×

இலக்கிய துறையில் சிறப்பான தொண்டு எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இலக்கிய துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாமாவுக்கு 2024ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசால்”அவ்வையார் விருது”வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு 2024ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா, பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வியல் அனுபவங்கள் மூலம், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை அநீதிகளை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், குசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

இவர் எழுதிய ”கருக்கு ” என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000ம் ஆண்டின் ‘கிராஸ் வேர்ட்புக்’ விருதை பெற்றுள்ளது.  இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நல ஆணையர் அமுதவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இலக்கிய துறையில் சிறப்பான தொண்டு எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Bama ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப்...