×

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது: சாலையில் அமர்ந்தும், கதவு மீது ஏறியும் போராடியதால் பரபரப்பு

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். நீட் தேர்வு குளறுபடிகளை தொடர்ந்து, நீட் ேதர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நேற்று காலை சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்று கூடினர். அப்போது நீட் தேர்வுக்கும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பதாகை ஏந்தியபடி சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் மாணவர்கள் சாலையில் அமர்ந்தபடி கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் போலீசாரின் தடையை மீறி சாஸ்திரிபவன் நுழைவாயில் மீது ஏறி மாணவர்கள் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுபோல, திருச்சி, தஞ்சை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

The post நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது: சாலையில் அமர்ந்தும், கதவு மீது ஏறியும் போராடியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Students Union ,Shastri Bhawan ,CHENNAI ,Indian Students Association ,Shastri Bhavan ,NEET ,Indian Students' Union ,Dinakaran ,
× RELATED மாணவர் சங்க முன்னணி ஊழியர்களுக்கான பயிலரங்கு